மும்பை: பாஜக ஆளாத மாநிலங்களில் பெட்ரோல் விலையை குறைக்க அம்மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதற்கு, பதிலடியாக எரிபொருள் விலை உயர்வுக்கு மாநில அரசு பொறுப்பேற்க முடியாது என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறியது: “இன்று மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலையில் மத்திய அரசுக்கு ரூ.24.38-ம், மாநில அரசுக்கு ரூ.22.37-ம் கிடைக்கிறது. அதே போல, பெட்ரோல் விலையில், ரூ.31.58 மத்திய வரியாகவும், ரூ. 32.55 மாநில வரியாகவும் உள்ளது. எனவே, மாநில அரசால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்பது உண்மையில்லை.
எனது அரசாங்கம் ஏற்கெனவே இயற்கை எரிவாயு மீது வரி விலக்கு அளித்துள்ளது. இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மதிப்புக்கூட்டு வரி 13.5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வரிச்சட்டங்களின் கீழ் மாநிலத்தில் சிறு, குறு வியாபாரிகள் பயனடையும் வகையில் நிலுவைத் தொகைத் தள்ளுபடி, சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான 0.1 சதவீதம் முத்திரை வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசுகளிடம் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடக்கிறது. அனைத்து மாநிலங்களும் சமமாக நடத்தப்படவில்லை” அவர் என்று குற்றம்சாட்டினார்.
முன்னதாக, நாட்டில் கோவிட் -19 நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக இன்று நடந்த முதல்வர்களுடனான சந்திப்பின்போது, பிரதமர் மோடி, பாஜக ஆளாத மாநிலங்களின் எரிபொருள் விலை குறித்தும் பேசினார். அப்போது, “நான் யாரையும் விமர்சிக்கவில்லை. ஆனால், உங்கள் மாநில மக்களின் நலனுக்காக உங்களிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஆறு மாதங்கள் தாமதத்திற்கு பின்னரும், தற்போது வாட் வரியை இப்போது குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.