டெக்சாஸ்: ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்குகிறார் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மஸ்க். இந்நிலையில், பேச்சு சுதந்திரம் என்றால் என்னவென்பது குறித்தும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
உலக அளவில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். இந்த தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார் எலான் மஸ்க். அந்த செய்தி உறுதியானது முதல் ட்விட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சு அதிகரிக்கக்கூடும் என தங்களது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர் மனித உரிமை ஆர்வலர்கள். ஏனெனில் ‘பேச்சு சுதந்திரத்தை விரும்புபவன் நான்’ என வெளிப்படையாகவே மஸ்க் சொன்னது தான் இதற்கு காரணம்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ஜனநாயகத்திற்கு அடிப்படையே பேச்சு சுதந்திரம் தான் என சொல்லியிருந்தார் மஸ்க். அத்துடன் ட்விட்டர் தளத்தில் பேச்சு சுதந்திரம் குறித்து கேள்வியும் எழுப்பியிருந்தார். தொடர்ந்து ட்விட்டரில் சுமார் 9 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக தெரிவித்தார். பின்னர் அந்த தளத்தின் எடிட் பட்டன் அம்சம் குறித்தும் பேசினார். இந்தச் சூழலில் தற்போது ட்விட்டரை தன்வசப்படுத்தி உள்ளார் மஸ்க்.
“பேச்சு சுதந்திரம் என்பது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் பொருந்தும் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். சட்டத்தை மீறும் சென்சார்ஷிப்புக்கு நான் எதிரானவன். பேச்சு சுதந்திரத்தை குறைக்க வேண்டும் என விரும்பும் மக்கள் அதற்கான சட்டத்தை இயற்றச் சொல்லி அரசினை அணுகலாம். சட்டத்தை மீறுவது மக்களின் விருப்பத்துக்கு நேர் எதிரானது” என ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் மஸ்க்.
அதற்கு முன்னதாக தன்னை விமர்சிப்பவர்களை நோக்கி, “பேச்சு சுதந்திரத்தை எண்ணி அதிகம் அஞ்சுபவர்கள் தான் இந்த எதிர்வினைகள் அனைத்தையும் சொல்கின்றனர்” என ட்வீட் செய்திருந்தார் மஸ்க்.