ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசார்ணைக்கு வந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பேரறிவாளன் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் குடியரசுத் தலைவர் யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்கிக்கொள்ள வேண்டும்? இந்த வழக்கில் பேரறிவாளனை நாங்களே விடுதலை செய்வதுதான் இந்த வழக்குக்கு தீர்வுகாண வழி என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின்போது, பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறார் என்று பேரறிவாளன் தரப்பிலிருந்து வாதிடப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆளுநர் செயல்படும் விதம் குறித்துகூட ஜனாதிபதிதான் முடிவெடுக்க முடியும். அரசியல் சாசன பிரிவு 72-ம் இதைத்தான் கூறுகிறது” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். “ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்த அதிகாரங்கள் குறித்த விவாதங்களுக்குள் செல்லாமல், நாங்கள் ஏன் பேரறிவாளனை விடுதலைச் செய்யக்கூடாது. பேரறிவாளவன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. இந்த வழக்கை முடித்து வைக்க பேரறிவாளனை விடுதலை செய்வதே ஒரே தீர்வு என்று கருதுகிறோம். பேரறிவாளவனை விடுதலை செய்வதில் ஆளுநருக்கு அதிகாரமா குடியரசுத் தலைவருக்கு அதிகாரமா என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
மேலும், “அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால், அது கூட்டாட்சி அமைப்புக்கே மிகப்பெரிய பாதகமாகிவிடும். மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராக ஆளுநர் தனது சொந்த கண்ணோட்டத்தில் செல்ல அதிகாரம் இல்லை. மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநர் அதிகாரம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
இறுதியாக, இந்த வழக்கில், பேரறிவாளனை விடுத்லை செய்வது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“