தஞ்சை:
தஞ்சை, களிமேடு பகுதியில் தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையையும் வழங்கினார். மேலும், காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களுடன் எப்போதும் இருப்பேன் என்று கூறிய முதலமைச்சர், சம்பவம் குறித்து அறிந்ததும், மீட்பு பணிகளை உடனடியாக செய்ய உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
‘விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் துறை முதன்மை செயலாளர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வார்’, என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.