திரைப்படம் என்பது தமிழர் வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவியிருந்தது என்பதற்கு அத்தாட்சி, புதிதாகத் திருமணம் ஆன தம்பதியினர் புதுப்படத்திற்குச் செல்வது என்பது கட்டாயம். சிலவேளைகளில் தம்பதிகள் தனித்தோ அல்லது பெருங்கும்பலுடனோ திரையரங்குக்கு வருவார்கள். 90களில்கூட மதுரைக்காரர்கள் தியேட்டருக்குச் சென்றதையும், பார்த்த திரைப்படங்களையும் வாழ்க்கையின் ஒருபகுதியாகக் கருதினர். சிலர் திருமணமாகி மனைவியுடன் சென்று பார்த்த முதல் திரைப்படம் தொடங்கி, வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் பார்த்த திரைப்படங்கள் வரை அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கின்றனர்.
அன்றைய காலகட்டத்தில் குடும்பத் தலைவியான பெண்கள் கைக்குழந்தையுடன் தியேட்டரில் வெக்கையடிக்கிற பகல் காட்சிக்கு வருவார்கள். குடும்பப் பிரச்னைகளிலிருந்து விடுபட பெரும்பாலான பெண்கள் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்தனர். திரைப்பட நடிகர் மீது பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிற மோகம் வெளிப்படையாகத் தெரியாது. எம்.ஜி.ஆர் முகம் பெரும்பாலான பெண்களைக் கவர்ந்தமைக்குக் காரணம் எப்பொழுதும் நல்லவராகவும் வீரதீரம் மிக்கவராகவும் விளங்கியதே ஒரு காரணம். கை வண்டி இழுக்கிறவர்கள், ரிக்ஷா ஓட்டுகிறவர்கள், சுமை தூக்குகிறவர்கள் போன்ற உழைப்பாளிகள் தங்களுடைய உடல் வலியையும் வறுமையையும் மூன்று மணி நேரம் மறந்திட சினிமா அருமையான பொழுதுபோக்காக விளங்கியது. சினிமா எல்லோருக்கும் ஏதோவொரு விதத்தில் போதையைத் தந்தது. மதுரைக்காரர்களின் அன்றாட வாழ்க்கையில் சினிமா செல்வாக்குச் செலுத்தியது உண்மைதான். ஏன் இந்த நிலை? யோசிக்க வேண்டியுள்ளது.
கிராமப்புறங்களில் திருமண மண்டபங்கள் இல்லாத காலகட்டத்தில், திருப்பரங்குன்றத்திலுள்ள மண்டபங்களிலோ அல்லது மதுரையிலுள்ள மண்டபங்களிலோ ஓரளவு வசதியானவர்களின் வீட்டுத் திருமணங்கள் நடைபெற்றன. அப்பொழுது மதுரைக்குள் மட்டும் நகரப் பேருந்துகள் இயங்கின. எனவே சுற்றுப்புறக் கிராமத்தினர் புறநகர்ப் பேருந்து மூலம் முதல்நாள் மாலை வேளையில் மண்டபத்திற்கு வந்து விடுவார்கள். இரவு உணவிற்குப் பின்னர் கல்யாணக் கோஷ்டியினர், மாப்பிள்ளை உட்பட திரைப்படத்திற்குச் செல்வார்கள். எந்தப் படம் திரையிடப்பட்டிருக்கிறது என்பது முக்கியமல்ல. ஏதோவொரு குப்பைத் திரைப்படம் என்றாலும் எல்லோரும் சேர்ந்து திரையரங்கில் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு மண்டபத்திற்கு நடந்து வருவார்கள். சிறுவர் சிறுமியரைப் பொறுத்தவரையில், திருமணக் கொண்டாட்டம் என்ற நிகழ்வுடன் திரைப்படம் என்ற அம்சமும் சேர்ந்துகொண்டது இயல்பாக நடந்தேறியது.
எழுபதுகளில் நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் திரைப்படம் பார்க்கச் செல்வது இயல்பாக நடைபெற்றது. நான் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தபோது நடைபெற்ற விடுதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தேன். வெற்றியைக் கொண்டாடுவதற்காக இருபது நண்பர்கள் சேர்ந்து சினிப்ரியா தியேட்டரில் இரண்டாவது ஆட்டம் சிவாஜி நடித்த ’மன்னவன் வந்தானடி’ திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். அன்றைய காலகட்டத்தில் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிற மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, விடைபெறு நாளில் தியேட்டருக்குச் சென்றனர். நான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பி.எல்.ஐ.எசி படித்தபோது விடைபெறு நாளில் மதிய விருந்துக்குப் பின்னர் மாணவமாணவியர் ஒட்டுமொத்தமாகச் சக்தி தியேட்டரில் ’ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது’ திரைப்படம் பார்த்தோம்.
வார இறுதிநாள்கள் மட்டுமன்றி, கோவில் திருவிழா, கல்யாணம், சடங்கு போன்ற விழாக்களிலும் திரைப்படத்திற்குச் செல்லுவது பெரு வழக்கமாக இருந்தது. சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்குவதையொட்டி சுற்றிலுமுள்ள கிராமத்தினர் சில லட்சங்களில் ஒரே நாளில் மதுரையில் கூடினர். சாமியை தரிசிப்பதைவிடத் திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த நடிகரின் படங்களைக் கண்டு ரசிப்பதில் பலரும் ஆர்வம் காட்டினர். ஒரே நாளில் மூன்று திரைப்படங்களை விடியவிடியப் பார்த்துவிட்டு, மறுநாளில் அலுப்புடன் ஊருக்குச் செல்கிறவர்களின் மனம் களிப்பினால் ததும்பியது. சில மாதங்கள் பாடுபட்டுச் சேர்த்த பணத்தைத் திரைப்படங்கள் காண்பதற்கும், சித்திரைக் கண்காட்சியிலும் செலவழித்துவிட்டுக் கிராமத்துக்குத் திரும்புகிற இளைஞர்களுக்கு, அந்தக் கோடைக்காலம் முழுக்க மரத்தடிகளில் அமர்ந்து கதைப்பதற்கு விஷயங்கள் நிரம்ப இருக்கும்.
பொதுவாக, மாலைக் காட்சிக்குத் தியேட்டர்களில் நுழைவுச் சீட்டுக் கிடைப்பது சிரமம். எனவே ‘பிளாக்’கில் கூடுதல் கட்டணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிக்கொள்வது நடைமுறையில் இருந்தது. அதிலும் வணிக நிறுவனங்கள் நிறைந்த மதுரையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் ‘நுழைவுச் சீட்டு’ வாங்குவது கஷ்டம். ஒரு திரையரங்கில் ‘அரங்கு நிறைந்தது’ என்ற அறிவிப்பு தொங்கவிடப்பட்டவுடன், பக்கத்திலிருக்கும் வேறொரு திரையரங்கை நோக்கிப் படையெடுப்பார்கள்.
நுழைவுக் கட்டணம் பெண்களுக்கு 0.55 பைசா; ஆண்களுக்கு 0.80, 0.90 பைசா, மாடியிலிருந்து பார்க்க 1.15, 1.45, 2.30. மதுரையிலுள்ள தங்கம் தியேட்டர் ஆசியாவிலே மிகப்பெரியது. 0.90 காசு டிக்கட்டை மூன்று கவுன்ட்டர்களில் கொடுப்பார்கள். அது மட்டும் ஆயிரம் இருக்கைகள் இருக்கும். தங்கம் தியேட்டரில் ‘அரங்கு நிறைவது’ அடிக்கடி நடைபெறாதது. வெள்ளிவிழா காணும் எம்.ஜி.ஆர் படங்களே தங்கம் தியேட்டரில் எழுபது நாள்கள் திரையிடப்பட்டால் அதிசயம்தான்.
திரையரங்க உரிமையாளர்களுக்குச் சமூகத்தில் நிரம்ப மரியாதை இருந்தது. என்னுடன் கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் மதுரையிலுள்ள சென்ட்ரல் தியேட்டர் உரிமையாளரின் மகன் என்பதைச் சக மாணவர்கள் முக்கியமான செய்தியைப்போலப் பரிமாறிக்கொள்வார்கள். எழுபதுகளில்கூட வார இறுதி நாள்கள்தவிர, மற்ற நாள்களில் மதியம், மாலை, இரவு என மூன்று காட்சிகள்தான் நடத்தப்பட்டன. பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாள்களில் அரசதிகாரி அனுமதிபெற்று ஐந்து காட்சிகள் நடைபெற்றன. இரவுக்காட்சி 10.45 க்குத் தொடங்கி செய்திச் சுருள், விளம்பரங்கள் முடிந்து முதன்மைப் படம் தொடங்கிட 11.10 ஆகிவிடும். இரவுக்காட்சி முடிய நள்ளிரவு தாண்டி 2.00 மணியாகிவிடும்.
அதற்குப் பின்னர் சைக்கிளிலோ அல்லது நடந்தோ வீட்டிற்குப் போவதற்கு அதிகாலை 3.00 மணிகூட ஆகிவிடும். மதுரையைச் சுற்றிலும் பத்து மைல் தொலைவிலுள்ள கிராமங்களில் வாழும் இளைஞர்கள், சைக்கிளுக்கு இருவர் என ‘டபுள் பெடல்’ போட்டு இரவுக்காட்சியைப் பார்த்துவிட்டுத் தங்கள் வீட்டிற்குப் போவார்கள். இதனால் சில திரையரங்குகளில் சைக்கிளில் வருகின்றவர்களுக்கு முன்னுரிமை தந்து நுழைவுச் சீட்டு வழங்கினர்.
இரண்டாவது ஆட்டம் திரைப்படம் பார்த்துவிட்டு, தியேட்டரை விட்டு 1.30 மணியளவில் கிளம்பி, பெரியார் பேருந்து நிலையத்திற்கு வந்து தங்களுடைய ஊருக்கு ஐந்து மணிக்குப் புறப்படுகிற பேருந்துக்காகப் பலரும் காத்திருந்தனர். அன்றைய காலகட்டத்தில் இரவுப் பேருந்துகள் கிடையாது. பேருந்து நிலையத்தில் காத்திருந்தவர்களில் சிலர் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, சந்தேக வழக்கில் தெற்கு வாசல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படிப் போனவர்களில் சிலர் அடுத்த நாள் காலையில் நீதியரசர் முன் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள்கள் காவலில் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எங்கள் ஊரைச் சேர்ந்தவர் ஒருவர், இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு, பேருந்து நிலையத்தில் காத்திருந்தவர் சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். சினிமா படுத்துகிற பாடுகளில் இதுவும் ஒன்று. சுதந்திர இந்தியாவில் ஒரு குடிமகன்மீது சந்தேகக் கேஸ் போடுவது எப்படிச் சரியாகும்? பிரிட்டிஷ் காலனியாதிக்கச் சட்டம், சுதந்திர இந்தியாவிலும் தொடர்கிறதன் விளைவுதான் சந்தேகக் கேஸ்.
திரையரங்க ஒளியின் வழியே நடைபெறும் மாயத்தினால் உயிர்பெற்று எழும் பிம்பங்கள் தரும் போதை பலருக்குக் கிளுகிளுப்பை ஏற்படுத்தின; சிலருக்கு ‘சண்டை’யை உருவாக்கிடும் களமாக விளங்கின. சகபார்வையாளர்மீது வன்முறையை பிரயோகித்து அடித்து நொறுக்குகிறவர்கள் இருந்தனர். வெறுப்பையும் கசப்பையும் வெளிப்படுத்திடும் ரசிகர்களை நெறிப்படுத்திட பெரும்பாலான திரையரங்குகளில் ‘அடியாட்கள்’ இருந்தனர். சிறு சச்சரவுகளையும் கலாட்டாக்களையும் தடுத்து ஒழுங்கை நிலைநாட்டிட, திரையரங்க நிர்வாகத்தினர் நிரந்தரமாகச் சிலரைப் பணியில் வைத்திருந்தனர்.
எல்லாவற்றுக்கும் காவல்துறையை அழைப்பது இயலாதது. காவலர்கள் வந்து அமைதியை நிலைநாட்டுவதற்குள் கத்திக்குத்துகூட நிகழ்ந்துவிடும். எனவே பல்வேறு தரப்பினர் வந்து குழுமும் திரையரங்கில் எப்பவும் எதுவும் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் நிலவுகிற சூழலில், ‘அடியாட்கள்’ நிரம்ப உதவினார்கள். இத்தகையோர் பார்க்க ஆள் ஒல்லியாக இருந்தாலும், துணிந்து கையை நீட்டுவார்கள். அப்புறம், அநாவசியமாகக் கெட்ட வார்த்தைகளைச் சப்தமாகச் சொல்வதில் நிபுணர்கள். திரையரங்கத்தில் பெறும் ஊதியம் மிகக்குறைவாக இருப்பினும், இத்தகைய வேலையில் சேர்ந்தோர், ‘அதிகார போதை’ காரணமாக, எங்கும் வேலைக்குச் செல்லாமல், பகல் முழுக்கச் சோர்ந்து தூங்குவார்கள். கேளிக்கை மையமான திரையரங்கு புகழ், பெருமை, அதிகாரம், பணம், வன்முறை சார்ந்த நிறுவனமாகவும் ஒரு காலத்தில் இருந்தது.
இன்று ‘கிரிக்கெட்’ பற்றிய பேச்சுகள் இளைஞர்களிடையே நிலவுவதுபோல, எழுபதுகளில்கூட திரைப்படம் பற்றிய பேச்சுகள் இருந்தன. தங்களுக்குப் பிடித்த நடிகர் நடித்து வெளியான திரைப்படங்களைப் பற்றிய புள்ளிவிவரங்கள் பேசுபொருளாக இருக்கும். தமிழகமெங்கும் திரையிட்ட எல்லாத் திரையரங்குகளிலும் நூறு நாள்கள் ஓடிய படம் ‘மதுரை வீரன்’, சிந்தாமணியில் திரையரங்கில் படம் ஒரு மாதம் ஹவுஸ்புல் காட்சியாகத் திரையிடப்பட்டது. படத்தின் ஒரு மாத வசூல் பற்றிய கணக்கு, ’நாடோடி மன்னன்’ திரைப்படம் யாழ்ப்பாணத்திலும் பெற்ற வசூல், சிவாஜி நடித்த ’சொர்க்கம்’ திரைப்படம் சென்ட்ரல் தியேட்டரிலும் ’எங்கிருந்தோ வந்தாள்’ திரைப்படம் தேவி டாக்கீஸிலும் ஒரே நாளில் திரையிடப்பட்டு நூறு நாள்களைக் கடந்தது… இப்படியான பேச்சுகளைப் பேசுவதில் சிலர் கில்லாடிகளாக இருந்தனர்.
இவை மட்டுமன்றி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் பற்றியும் அலுக்காமல் பேசித் திரிந்த ரசிகர்களின் மூளைக்குள் ‘திரைப்படக் களஞ்சியம்’ கணினியின் நினைவகம் போலப் பதிந்திருந்தது.
திரைப்படம் நூறு நாள்களைக் கடந்து திரையிடப்படுமென்ற நிலையில், நூறாவது நாளை விமரிசையாக ரசிகர்கள் கொண்டாடினர். திரையரங்கை வண்ணத் தோரணங்களால் அலங்கரித்தனர்; நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு மலர்மாலை அணிவித்தனர். அன்றைய நாளில் திரைப்படம் காணவரும் பார்வையாளர்களுக்கு ‘சாக்கலேட்’ வழங்கினர். சில முக்கியமான திரைப்படங்கள் வெற்றியடைந்தபோது, நூறாவது நாளில், படத்தின் இடைவேளையில் நடிகர் நடிகைகள் நேரில் தோன்றிப் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ரசிகர் மன்றத்தினர் சொந்தக் காசில் லட்டு வழங்கினர்; சிலவேளைகளில் தியேட்டருக்கு வருகிற பெண்களுக்கு இனிப்புடன் ரோஜாப் பூவையும் வழங்கினர்.
’ஆட்டுக்கார அலமேலு’ படம் பெரிய வெற்றி பெற்றபோது, அந்தப் படத்தில் நடித்த ‘ஆடு’, திரையரங்க வாயிலில் கட்டப்பட்டிருந்தது. கொச்சை நாற்றமடித்த ஆட்டுக் கிடாயினைச் சுற்றி நின்று பலரும் வேடிக்கை பார்த்தனர்.
தெய்வத்தை முன்னிறுத்திய ‘அம்மன்’ படம் ஆடி மாதம் வெளியானபோது, படத்தின் இடையே, பரபரப்பான காட்சியில் ‘சாமி’ வந்து ஒரு பெண் பக்திப் பரசத்துடன் ஆடினாள். அந்தச் செய்தி காலைத் தினசரியில் செய்தியாக வெளியானது. மறுநாள் அந்தப் படத்தின் மாலைக்காட்சியில் ஏழெட்டுப் பெண்களுக்குச் ‘சாமி’ வந்துவிட்டது. சில பெண்கள் தலையை விரித்துப்போட்டு, ஓவெனக் கத்திக் குலவையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரையிலுள்ள பாண்டிமுனி கோயிலில் நடைபெறுகிற அருள் வந்து பெண்கள் ஆடும் காட்சி, திரையரங்கில் தினமும் காட்சிகள்தோறும் அரங்கேறியது. ‘பக்திக்குரிய இடம் கோயில் மட்டுமல்ல திரையரங்கும்தான்’ என்ற புதுமொழி எங்கும் பரவியது. திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் அந்தப் படத்தின் மூலம் கிடைத்தது.
`பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்ற திரைப்படப் பாடல் வரி திரைப்படம் தொடர்புடைய விஷயங்களுக்குப் பொருத்தமானது.