மலையாள 'விக்ருதி' தான் தமிழில் 'பயணிகள் கவனிக்கவும் : இயக்குனர் தகவல்
எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பயணிகள் கவனிக்கவும்'. விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தின் தலைப்பு எழுத்தார் பாலகுமாரன் எழுதிய புகழ்பெற்ற நாவலின் தலைப்பாகும். இதனால் பாலகுமாரனின் மகன் வழக்கு தொடர, அவரிடம் படத் தயாரிப்பாளரும் இயக்குனரும் மன்னிப்பு கேட்க பிரச்சினை முடிவுக்கு வந்தது.
படம் பற்றி இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் கூறியதாவது: மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் இது. சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்படும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் பொறுப்புணர்வு குறித்தும் இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது என்றார்.