யாங்கூன்-மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூச்சிக்கு, ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நம் அண்டை நாடான மியான்மரில், 2020ல் நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சான் சூச்சி, 76, தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றிபெற்று, ஆட்சி அமைத்தது. எனினும், அத்தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறிய அந்நாட்டின் ராணுவம், கடந்த ஆண்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது, ஆங் சான் சூச்சி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, ஆங் சான் சூச்சி மீது, 10க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், தன் மீதான புகார்களை, சூச்சி மறுத்து வந்தார்.இந்நிலையில், தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்ற வழக்கில், ஆங் சான் சூச்சிக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மியான்மர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை, அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தி உள்ளார்.ஏற்கனவே ஒரு வழக்கில், சூச்சிக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement