மாநில அரசு நிறைவேற்றும் தீர்மானத்துக்கு எதிராக தனிப்பட்ட கண்ணோட்டத்தில் ஆளுநர் செயல்பட முடியாது: பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

புதுடெல்லி: பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக் கூடாது? என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ‘மாநில அரசின் தீர்மானத்துக்கு எதிராக ஆளுநர் தனிப்பட்ட முடிவு எடுக்க அதிகாரம் இல்லை,’ என கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கான பேட்டரியை நான் வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ தரப்பில் இதுவரை கொடுக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கில் எனக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, விடுதலை செய்ய வேண்டும்,’ என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, வழக்கை பல கட்டங்களாக விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி கடந்த மாதம் 9ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன் வாதத்தில், “இந்த வழக்கில் இருந்து பேரறிவாளனை முழுமையாக விடுவிக்க வேண்டும். கைது செய்யப்பட்டதில் இருந்து அவருக்கு எதிரான ஒரு ஆதாரங்களை கூட சிபிஐ தரப்பில் தற்போது வரையில் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கான ஆதாரமும் அவர்களிடம் கிடையாது. மேலும், 161ன் சட்ட விதிகளின்படி மாநில அமைச்சரவையின் முடிவுக்கு இந்த விவகாரம் கட்டுப்பட்டது. ஆனால், ஆளுநர் அதனை கருத்தில் கொள்ளவில்லை. அவரது கால தாமதம் தான் மிகப்பெரிய பிரச்னையாக இந்த விவகாரத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வாதங்களை தொடர்ந்து முன்வைக்கும் போது கால தாமதம் ஆகத்தான் செய்யும்,’ என தெரிவித்தார்.இதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் எம்.என்.நட்ராஜ், “இந்த வழக்கு என்பது சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரித்தது என்பதால் பேரறிவாளனை விடுவிக்க முடியாது. மேலும் பேரறிவாளன் தொடர்பான விவகாரம் ஆளுநரிடம் நிலுவையில் இல்லை. அரசியலமைப்பு சட்டம்  72வது  பிரிவின்படி ஆளுநர் விவகாரத்தை,  குடியரசுத் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். அதில் பேரறிவாளனை விடுதலை செய்ய உட்படுத்தப்படுவது சரியா, தவறா என்பது உட்பட அனைத்தும் அடங்கும். மேலும், இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் வாதங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அரிஸ்டாட்டில், “சட்டப்பேரவையில் அமைச்சரவையின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசே தன்னிச்சையாக ஏழு பேர் விடுதலை முடிவை மேற்கொள்ள அதிகாரம் உண்டு. இருப்பினும், இந்த விவகாரத்தில் யார் விடுதலை முடிவை எடுக்க வேண்டும் என்பது தான் தொடர்ந்து பிரச்னையாக உள்ளது. அதனை நீதிமன்றமே தெளிவுப்படுத்த வேண்டும். மேலும், மாநில அரசு எடுக்கும் முடிவுகளை ஒன்றிய அரசு ஆளுநர் மூலம் முடக்கி வைத்தால் கூட்டாட்சி என்பது சீர்குலைந்து விடும்,’ என தெரிவித்தனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது: பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது? இதுபோன்ற விடுதலை பிரச்னையில் ஏன் அவர் இடையில் சிக்கியிருக்க வேண்டும். ஒரு வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவரை ஏன் விடுதலை செய்து, இதுதொடர்பான வழக்கை முடிந்து வைக்கக் கூடாது? அது தான் இதற்கான தீர்வாக இருக்கும் என்று நீதிமன்றமும் கருதுகிறது. இப்படி கேட்பதால் நாங்கள் உங்களை மிரட்டுகிறோம் என்று நினைக்க வேண்டாம். ஒரு வழக்கின் வாதம் என்பது அனுமதிக்கப்படாததை மட்டுமே குறிப்பிடும். அதில் ஆளுநரின் நடவடிக்கையும் அடங்கும். மேலும், பேரறிவாளன் தரப்பை பொருத்தமட்டில் அவருக்கான தண்டனையை அனுபவித்து விட்டார். அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் அவர் சிறையில் இருக்க வேண்டும். குறிப்பாக நீதிமன்றங்களால் வழங்கப்படும் விடுதலையில் இருந்து பேரறிவாளனை எப்படி வேறுபடுத்த முடியும். அதற்கான சாத்தியம் கிடையாது. மேலும், தமிழக ஆளுநர் தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம் செயல்படுகிறார் என்றால், அவர் ஆளுநரா அல்லது நியமிக்கப்பட்ட நிர்வாகியா? மாநில அரசின் பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவதற்கான அதிகாரம் என்ன? முக்கியமாக, மாநில அரசு எடுக்கும் இறுதி முடிவுக்கு எதிராக ஆளுநர் தனிப்பட்ட கண்ணோட்டத்தில் செல்வதற்கான முகாந்திரமே கிடையாது. ஆளுநர் செயல்பாட்டால் இந்த வழக்கானது ஒவ்வொரு முறையும் தேவையில்லாமல் ஒத்திவைக்கும் சூழல் உருவாகி வருகிறது. இந்த விவகாரத்தில் நீங்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிராக ஒரு மோசமான முன் உதாரணத்தை வெளிப்படையாக காண்பிக்கிறது. இந்த விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசும், சிபிஐ.யும் உச்ச நீதிமன்றம் இதற்கு முன் வழங்கியுள்ள அரசியலமைப்பு அமர்வு தீர்ப்புக்கு எதிராக செல்கின்றன. இது தொடர்பான விசாரணையை வரும் புதன்கிழமை அதாவது மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்புகளுக்கு எதிராக வாதிட நினைப்பவர்கள், தங்கள் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். மேலும், பேரறிவாளன் தொடர்பான அனைத்து வழக்கு ஆதாரங்களையும் தமிழக அரசு எந்த நேரத்திலும் தயாராக வைத்திருக்க வேண்டும். இவர்கள் நீதிபதிகள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.