நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக இந்திய பங்கு சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஏற்றம் கண்ட சந்தையானது, இன்று மீண்டும் சரிவினையே கண்டுள்ளது.
குறிப்பாக ஆட்டோ, ஐடி, மெட்டல், பார்மா உள்ளிட்ட பல முக்கிய துறைகள் சரிவில் காணப்படுகின்றது. இது இன்னும் சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
மேலும் நாளை இந்திய சந்தையினை பொறுத்தவரையில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் அதன் அழுத்தம் இன்றே இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அக்சென்சர்-ன் வெற்றி இந்திய ஐடி நிறுவனங்களின் தோல்வியா..? உண்மை என்ன..?
சர்வதேச சந்தை நிலவரம்
சர்வதேச சந்தையில் அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே காணப்பட்டன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது. பரவி வரும் கொரோனா, பணவீக்கம், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என பலவும் இன்னும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அன்னிய முதலீடுகள்
கடந்த ஏப்ரல் 26 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 1174.05 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1643.84 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்எஸ்இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன.
ரூபாய் நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 12 பைசா குறைந்து, 76.69 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 76.57 ரூபாயாக வீழ்ச்சி கண்டு முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவும் சந்தையில் அழுத்தத்திற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 279 புள்ளிகள் குறைந்து, 57,077.61 புள்ளிகளாகவும், நிஃப்டி 117.40 புள்ளிகள் குறைந்து, 17,083.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 430.11 புள்ளிகள் குறைந்து, 56,926.50 புள்ளிகளாகவும், நிஃப்டி 116.10 புள்ளிகள் குறைந்து, 17,084.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 772 பங்குகள் ஏற்றத்திலும், 1203 பங்குகள் சரிவிலும்,114 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
கவனிக்க வேண்டிய பங்குகள்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் ஐடி பங்குகள், பஜாஜ் பைனான்ஸ், ஹெ யு எல், பஜாஜ் ஆட்டோ, மேக்ரோடெக் டெவப்பர்ஸ், ஹெச் டி எஃப் சி லைஃப், ரிலையன்ஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளன.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ எஃப்,எம்.சி.ஜி, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ டெக், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவிலிம், மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக சரிவிலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச் டி எஃப் சி வங்கி, ஹெச் டி எஃப் சி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், ஹிண்டால்கோ, பஜாஜ் பின்செர்வ், விப்ரோ, பிபிசிஎல் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஹெச் டி எஃப் சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சரிவில் தொடங்கிய சந்தையானது, 10.27 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 438.26 புள்ளிகள் குறைந்து, 56,918.35 புள்ளிகளாகவும், நிஃப்டி 151.05 புள்ளிகள் குறைந்து, 17,049.75 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: sensex falls above 400 points, dragged by auto, IT, metal, pharma
opening bell: sensex falls above 400 points, dragged by auto, IT, metal, pharma/மீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை.. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. ஏன்?