சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தீ விபத்து ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 2வது டவரில் அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து நடந்ததாக முற்கட்ட தகவல் வெளியானது. ஆனால், இறுதியில் மின்கசிவு மூலம் தீ விபத்து நடைபெற்றதாகவும், உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இதில் 2-வது டவரின் பின்புறம் உள்ள சர்ஜிக்கல் உபகரணங்கள் வைக்கும் அறையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அதிரடியாக அகற்றப்பட்டதுடன், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெளியே எடுத்துச் செல்லும் பணிகளை மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக மேற்கொண்டனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில் தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் விரைந்து வந்து, ஆய்வு செய்ததுடன், தீயணைப்பு பணிகளை முடுக்கி விட்டனர். இதனால் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் “மருத்துவமனையிம் நியூரோ வாட்டில் தீ விபத்து ஏற்பட்டள்ளது. விபத்து ஏற்பட்ட உடன் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை மீட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த தீ விபத்தானது யாரும் எதிர்பார்க்காத முறையில் மின் கசிவு மூலம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட உடனே சிகிச்சை பெற்றவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 3 பேர் ஐசியூவில் இருந்தனர். அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.10 ஆக்சிஜன் சிலிண்டர்களும் மீட்கப்பட்டுள்ளம. உயிரிழப்பு எதுவும் பதிவாகிகவில்லை என்றார்.