மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா 63-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர்.
இதற்கிடையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது பல்வேறு மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதற்கு பதிலடியாக தங்களிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்கும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் பணமான ரூபிள் -இல் தான் வாங்க வேண்டும் என ரஷியா அதிரடியாக அறிவித்தது.
இதனால், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்கும் ஜெர்மனி, போலாந்து, பல்கிரியா, ஹங்கேரி, ஆஸ்திரியா உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியடைந்தன. ஐரோப்பாவின் 40 சதவிகித எரிவாயு தேவையை ரஷியா பூர்த்தி செய்து வருவதால் இந்த அறிவிப்பு உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால், தங்கள் பணமான ரூபிளை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்குமாறு ரஷியா அறிவித்த போதும் பல ஐரோப்பிய நாடுகள் அதை பின்பற்றாமல் தொடர்ந்து அமெரிக்க டாலரிலேயே ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தன.
இந்நிலையில், போலாந்து, பல்கிரியாவுக்கு வழங்கிவந்த கச்சா எண்ணெய், எரிவாயுவை ரஷியா இன்று அதிரடியாக நிறுத்தியுள்ளது. ரஷியாவின் அரசு நிறுவனமான கேஸ்புரொம் போலாந்தின் அரசு நிறுவனமான பிஜிஎன் இங் மற்றும் பல்கிரியாவின் அரசு நிறுவனமான பல்கர் கேஸ் நிறுவனங்களுக்கு வழங்கி வந்த எரிவாயுவை இன்று அதிரடியாக நிறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட காலக்கேடுவிற்குள் கச்சா எண்ணெய்க்கான தொகையை ரஷிய ரூபிளில் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷிய அரசு எண்ணெய் நிறுவனம் கேஸ்புரொம் அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய்க்கான தொகையை தங்கள் நாட்டு பணமான ரூபிள் பணத்தில் தராததால் போலாந்து, பல்கிரியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த கச்சா எண்ணெயை ரஷியா நிறுத்தியுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.