திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அருகே ஆநாடு பகுதியை சேர்ந்தவர் சுதீஷ் லால் (42). இவரது மனைவி ஷைனி, துபாயில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் விடுமுறை முடிந்து இன்று துபாய் செல்வதற்காக கொச்சியில் இருந்து டிக்கெட் எடுத்திருந்தார். இதற்காக நேற்று நெடுமங்காட்டில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டார். ஷைனியை வழியனுப்புவதற்காக கணவர் சுதீஷ் லால், மகன் அம்பாடி (12), உறவினர்கள் ஷைஜு (34), அபிராக் (35) ஆகியோர் சென்றனர். காரை, சுதீஷ் லால் ஓட்டினார். அதிகாலை 4 மணியளவில் ஆலப்புழா அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது எதிரே எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக கார் மீது லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் கார் சின்னா பின்னமாக நொறுங்கியது. தகவலறிந்து அந்த பகுதியினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரில், சுதீஷ் லால், அம்பாடி, ஷைஜு, அபிராக் ஆகியோர் உடல் நசுங்கி இறந்து கிடந்தனர். ஷைனி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு, ஆலப்புழா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து அம்பலப்புழா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.