பியாங்யாங்: வட கொரியா அதிகபட்ச வேகத்தில் தனது அணுசக்திகயை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் 90-வது ஆண்டு ராணுவ விழா திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட அணிவகுப்பில் ஏராளமான ஏவுகனைகளை பங்கேற்றன. போர் விமானங்கள் மூலம் சாகச நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்த அணிவகுப்பில் தடை செய்யப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் வடகொரியா காட்சிப்படுத்தியது தற்போது உலக நாடுகளிடம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேசும்போது, “ வட கொரியா அதிகபட்ச வேகத்தில் அதன் அணுசக்திகயை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும்.” என்று பேசினார்.
வட கொரியாவின் இந்த ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் அணுஆயுத சோதனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உறுதியுடன் இருப்பதாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை கூறியது.
வட கொரியா கடந்த ஜனவரி மாதம் ஏவுகணை பரிசோதனை ஒன்றைச் செய்தது. 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வட கொரியா இதுவரை 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த நிலையில் இந்த அணிவகுப்பை வட கொரியா நடத்தியுள்ளது. வட கொரியாவின் அச்சமூட்டும் செயல்பாடுகள் கவலையை அளித்திருப்பதாக அண்டை நாடுகளான தென் கொரியாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன.
கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று ஐ.நா கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.