புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதம் உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்த சாமியார்கள் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் தூண்டப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் இன்று துறவிகள் மாநாடு நடைபெறுகிறது. வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரூர்கியில் இன்று நடக்க உள்ள துறவிகள் மாநாட்டை தடை செய்யக் கோரியும் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் “இதுபோன்ற வெறுப்பு பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும். மாநில அரசு இதனை அனுமதிக்கக் கூடாது. தொடர்ந்து நடந்தால் அதற்கு தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும். தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்புவோம். இது தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வெறுப்பு பேச்சுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இதே போன்று, இமாச்சல பிரதேசத்தில் இம்மாத ஆரம்பத்தில் நடந்த கூட்டம் தொடர்பான மற்றொரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வெறுப்பு பேச்சுக்களை மாநில அரசு தடுக்க வேண்டும் என்றும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மே 7-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை மே 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.