வேலூர் அடுக்கம்பாறையை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், 2020-ம் ஆண்டு வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். அதே கடையில் பணிபுரிந்துவந்த தன்னைவிட 4 வயது குறைவான காட்பாடியைச் சேர்ந்த இளைஞருடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்துவந்தனர். 18.01.2020 அன்று இரவு 9.30 மணியளவில், பணியை முடித்துவிட்டு இரண்டு பேரும் வேலூர் கோட்டை பூங்காவுக்குச் சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதியில் தனிமையில் இருந்தபோது, கஞ்சா போதையில் அங்கு வந்த 3 பேர், கழுத்தில் கத்தியை வைத்து இளம்பெண்ணின் தங்கக் கம்மலைப் பறித்தனர். இதையடுத்து, இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில், வேலூர் வடக்குக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோட்டை அருகே உள்ள கஸ்பா வசந்தபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (43), சக்திவேல் (21) மற்றும் 17 வயது சிறுவன் மற்றும் இவர்களிடமிருந்து திருட்டுப் பொருள்களை வாங்கிய தொரப்பாடியைச் சேர்ந்த மாரிமுத்து (33) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கும் சிறுவனை தவிர்த்து, வழக்கில் தொடர்புடைய மற்ற மூவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள் என நிரூபணம் ஆனதால், அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
வழக்கில் முதல் குற்றவாளி மணிகண்டன், 2-வது குற்றவாளி சக்திவேல் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பாலியல் குற்றவாளிகளிடமிருந்து திருட்டுப் பொருள்களை வாங்கிய குற்றத்துக்காக மூன்றாவது குற்றவாளியான மாரிமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.