புதுக்கோட்டை செம்பாட்டூர் ஊராட்சி நரங்கியன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அவர்கள் அளித்த மனுவில், “செம்பாட்டூர் ஊராட்சியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் குடிநீர் ஊரணி ஒன்று உள்ளது. இந்த ஊரணி எங்கள் பகுதி சுற்றுவட்டார பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு ஆதரமாக விளங்கி வருகிறது. 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஊரணியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை இந்த ஊரணி வழியாக செயல்படுத்த நிலம் கையகப்படுத்த உள்ளனர்.

இதனால், சுற்றுவட்டார மக்கள் அனைவருக்கும் கடுமையான சிரமத்துக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். மேலும், இந்த இடத்திலேயே ஊர் மக்களால் கட்டப்பட்டுள்ள 2 கோயில்கள், தண்ணீர் தொட்டி போன்றவை அமைந்துள்ளது. எனவே, இந்த வழியைத் தவிர்த்து அருகிலேயே அரசுக்கு தேவையான இடம் இருப்பதால் அதனை, அரசு மறு ஆய்வு செய்து பரிசீலித்து அங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, அந்த வழியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.