‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்திருந்த கிச்சா சுதீப் சமீபத்தில் அவருடைய புதிய படத்திற்கான ப்ரோமோஷன் ஒன்றில் பேசிய போது “ஹிந்தி இனி ஒருபோதும் தேசிய மொழி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது பாலிவுட் வட்டாரங்களில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு எதிர்வினையாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்விட் ஒன்றை பதிவு செய்திருந்தார், அதுவும் ஹிந்தியில். “எனது சகோதரரே… ஹிந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்? ஹிந்தி முன்பும் இப்போதும் இனிமேலும் நமது தாய்மொழியாக தேசிய மொழியாக இருக்கும்” எனப் பகிர்ந்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சுதீப், “நான் பேசியது, பொருள் வேறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறன். நான் நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படிச் சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்கிச் சொல்கிறேன். புண்படுத்துவது போலவோ, தூண்டும்படியோ, விவாதத்துக்கோ நான் அதைச் சொல்லவில்லை. நான் ஏன் அப்படிச் செய்யபோகிறேன் சார்” எனப் பதிலளித்திருந்தார்.
மேலும், அதன் தொடர்ச்சியாக, “நீங்கள் ஹிந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனென்றால் நாங்கள் மதித்து, நேசித்து ஹிந்தியை கற்றுக் கொண்டிருக்கிறோம். புண்படுத்துவது என் நோக்கம் இல்லை. ஆனால், இப்போது எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை என்னுடைய பதிலை நான் கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் அது உங்களால் எப்படிப் புரிந்து கொள்ளப்படும் என்று. நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?!” என்றார்.
இந்தப் பதிலுக்குப் பிறகு அஜய் தேவ்கன், “நீங்கள் என் நண்பர். தவறாக நான் புரிந்துகொண்டதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நான் எப்போதும் நமது துறை ஒன்று என்றே கருதி வருகிறேன். நாம் எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம். அதே போல எல்லோரும் நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று பகிர்ந்திருந்தார்.
இந்த விவாதத்தைச் சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள் பலர், ‘இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லவே இல்லை, அலுவல் மொழியே உண்டு’ என்று விளக்கி ட்வீட் செய்துவருகின்றனர்.
அதேபோல் மேலும் பலர், ‘சமீபமாக தென்னிந்திய படங்கள் பல பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டி வருவதும், ஹிந்திப் படங்கள் பல தோல்வியடைந்து வருவதும் பாலிவுட் டாப் ஸ்டார்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. அதன் வெளிப்பாடே இந்த விவாதம்’ என்றும் பேசி வருகின்றனர்.