சென்னை: நடப்பாண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தயாராக உள்ள கைதிகள் எத்தனை பேர் என்பது குறித்து சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறைவாசிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 53பேரும், 10-ம் வகுப்பு தேர்வை 201பேரும் எழுதுகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதுகுறித்து, அமைச்சர் ரகுபதி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து, சட்டம் மற்றும் நீதி நிர்வாகத்துறையின், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்
சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. சிறைவாசிகள் நூறு சதவீத கல்வி அறிவை அடையும் பொருட்டு, தமிழக அரசின் கல்வித்துறையும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், ஒருங்கிணைந்து இதற்கென பல திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகின்றன.
இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகமும் சிறைவாசிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகளை நடத்தி வருகிறது.
சிறைவாசிகள் ஏற்கெனவே பெற்றுள்ள கல்வி அறிவின் அடிப்படையியல் ஆரம்பக் கல்வி, தொடக்க கல்வி, மேல்நிலைக் கல்வி, திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலமாக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பயனுள்ள பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு என வகைப்படுத்தப்பட்டு படிப்பதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறையில் வகுப்புகள் நடத்துவதற்கு, கல்வித் தகுதி பெற்ற சிறைவாசிகளும் பயன்படுத்தப்படுகின்றனர்.
அனைத்து சிறைகளிலும் உள்ள கல்வியறிவு பெறாத சிறைவாசிகளுக்கு மாநில பள்ளிக்கல்வித் துறையின் சிறப்பு கல்வியறிவு பணி, திட்டத்தின் மூலமாக அடிப்படைக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்காக சிறைவாசிகள் அடையாளம் காணப்பட்டு சிறை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையினரால் மத்திய சிறை-I, புழலில் பயிற்சி வழங்கப்பட்டு, இத்திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட ஆரம்ப பள்ளிகள், அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் மாவட்டச் சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளி புதுக்கோட்டை ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன.
அரசு செலவில் சிறைவாசிகளுக்கு அஞ்சல் வழிக் கல்வி வசதி வழங்கப்படுகிறது.
அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் மாவட்டச் சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளி புதுக்கோட்டை ஆகியவற்றில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகாத்மா காந்தி கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.
விடுதலைக்குப் பின்னர் சிறைவாசிகள் லாபகரமான பணிகளில் ஈடுபடும் வண்ணம், அவர்களை தயார்படுத்தும் நோக்கில் பல்வேறு கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
2021-2022 ஆம் ஆண்டில் 53 சிறைவாசிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வையும், 99 சிறைவாசிகள் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வையும், 201 சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வையும், 232 சிறைவாசிகள் 8-ம் வகுப்பு தேர்வையும் எழுதுகின்றனர்.
2021-2022 ஆம் ஆண்டில் மொத்தம் 9,901 சிறைவாசிகள், கீழே குறிப்பிட்டவாறு பல்வேறு பாடப்பிரிவுகளைத் தொடர்ந்து பயின்று வருகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் அடிப்படை எழுத்தறிவு கல்வித் திட்டம் – 1,691
அடிப்படைக் கல்வி (7-ம் வகுப்பு வரை ஆயத்த படிப்பு) – 3,928
எழுத்தறிவு திட்டக் கல்வி (மாநில ஆதார மையம் வழியாக) -3,142
கணினி முதுகலை படிப்பு – 03
வணிக மேலாண்மை முதுகலை பட்டப்படிப்பு – 57
கலை, அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு – 17
கலை, அறிவியல், வணிகவியல், இலக்கியம், இளங்கலை படிப்பு -141
வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பு – 118
8,10,11 மற்றும் 12-ம் வகுப்பு -585
பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு – 219 என மொத்தம் 9,901 பேர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.