2017 எலான் மஸ்க் ட்விட்டரில் “எனக்கு ட்விட்டர் பிடித்திருக்கிறது” என ஒரு ட்வீட் பகிர்ந்தார். அதற்கு டேவ் ஸ்மித் “அப்போ நீங்க இத வாங்கணும்” என்று பதில் அனுப்புகிறார். எலான் மஸ்க் கவுண்டமணி ஸ்டைலில் ‘அந்த ரோடு என்ன விலைன்னு கேளு’ என்பது போல “அது என்ன விலை வரும்” என ட்வீட் செய்திருந்தார். அப்போது, 5 வருடங்களுக்குப் பிறகு அவர் உண்மையாகவே ட்விட்டரை வாங்குவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கட்டாய இராணுவ சேவையைத் தவிர்க்க தென்னாப்பிரிக்காவில் இருந்து கனடா செல்கிறார். “சின்ன வயதில் என்னை வளர்த்தது புத்தகங்கள். அதன் பிறகுதான் பெற்றோர்கள்” என்கிறார் எலான் மஸ்க். கல்லூரியில் இயற்பியல் படித்தவர் இணையம்தான் இனி எல்லாமே என நம்பி சகோதரனுடன் சேர்ந்து Zip2 என்று எல்லோ பேஜஸ் போல இணையதளம் ஒன்றைத் தொடங்குகிறார். அலுவலக அறையிலே தாங்கிக்கொள்கிறார். அருகில் இருந்த ஹாஸ்டலில்தான், குளிப்பது எல்லாமே. அந்த இணையதளம் நல்ல விலைக்குப் போகவே கிடைத்த காசை அடுத்து என்ன செய்யலாம் என அவர் திட்டம் தீட்டத் தொடங்கியபோது எலானின் வயது 27. ஆன்லைன் இணைய சேவை X.com பெரியளவில் கைகொடுக்கிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என அவர் பயணம் தொடங்குகிறது.
2000-ல் SpaceX நிறுவனத்தை ராக்கெட் பொறியாளர் டாம் முல்லர் உதவியுடன் தொடங்குகிறார் எலான் மஸ்க். அப்போது இரண்டு நோக்கங்கள் இருந்தது SpaceX நிறுவனத்துக்கு. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை வடிவமைப்பதும் மனிதர்கள் பல்வேறு கிரகங்களில் வசிக்கும் நிலையை உருவாக்குவது, ஆரம்பத்தில் விமர்சனத்துக்கு உள்ளானவர் பல்வேறு தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்களை உருவாக்கி சாதித்துக்காட்டினார். அடுத்த இலக்கு இன்னும் கொஞ்ச தூரத்தில்தான் இருக்கிறது. சிறுவயதிலே ஐசக் அஸிமோவின் புத்தகங்கள் எலான் மஸ்க்கின் பேவரைட். இன்றைக்கு எலான் கனவில்தான் நாம் வாழ்கிறோமா என்பதை சோதித்து கொள்ள வேண்டியிருக்கிறது.
டெஸ்லாவின் ஆரம்ப கால கார்கள் தோல்வியைத் தழுவின. டெஸ்லா விற்ற கார்களை திரும்பப் பெறவேண்டிய நிலைகூட வந்தது. டெஸ்லாவின் மதிப்பு அதலபாதாளத்துக்கு சென்றது. இன்னும் சில வாரங்களில் நிறுவனத்தை மூட வேண்டிய நிலை வரை சென்று திரும்பியது. அதன் பிறகான வளர்ச்சி அவரது நிகர மதிப்பையே உச்சிக்குக் கொண்டு சென்றது.எலான் மஸ்கின் Starlink இணைய வசதி வழங்கும் நிறுவனம் முதன்முறையாக பறக்கும் விமானத்தில் இணைய வசதி அறிமுகப்படுத்த இருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக எலான் Starlink உபகரணங்களை அனுப்பி வைத்தார். அமெரிக்கா முழுவதற்கும் இணைய வசதி தரும் நிறுவனத்தின் கனவு உலகம் முழுவதும் இணையத்தை நீட்டிப்பது.
`ட்விட்டரை நான் வாங்கப் போகிறேன்!’ என எலான் அறிவித்தபோது அதனை ஜோக்காக கருதி ஸ்க்ரோல் செய்தவர்கள் தான் அதிகம். 44 பில்லியன் அமெரிக்க டாலர்களை கேஷாக தருகிறேன். கண்டய்னர்கள் எடுத்துட்டு வாங்க என அவர் சொல்லாதது தான் குறை. ஏப்ரல் 25 ட்விட்டரின் 100 சதவீத பங்குகளை எலான் வாங்கிவிட்டார். இனி அவரது பதிவுகளை நீக்க யாரும் இருக்க போவதில்லை என நெட்டிசன்கள் ஆரவாரம் செய்கிறார்கள். இதையெல்லாம் மாற்ற போறேன் என நீண்ட பட்டியலோடு ட்விட்டர் பறவையை கைகளில் ஏந்தி கொண்டுள்ளார் எலான் மாஸ்க். இப்படி துணிச்சலாகப் பேசுவதோ பேசியதை செய்து காட்டுவதோ எலானுக்கு புதிது கிடையாது. எலான் ஒருமுறை சொன்னது போல, “நான் ஏலியன் கிடையாது. ஆனால் ஏலியனாக இருந்திருக்கிறேன்” என்பது போல அவரது செயல்பாடுகள், கனவுகள் எல்லாமும் ஒட்டுமொத்த உலகத்திற்கானது.