பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்த வருட நடுவர்களில் ஒருவராக தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரெஞ்ச் நடிகர் வின்சென்ட் லிண்டன் – நடுவர்களுக்குத் தலைமை வகிக்க, Iron Man 3 பட நடிகை ரெபேக்கா ஹால், இயக்குனர் ஜெப் நிக்கோல்ஸ், ஷெர்லாக் கோம்ஸ் படத்தில் நடித்த நூமி ரபேஸ் உள்ளிட்ட எட்டு நடுவர்களில் ஒருவராக தீபிகா படுகோன் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஒவ்வொரு முறையும் தீபிகா அசர வைக்கும் காஸ்டியூமில் செல்வார். இந்த முறை நடுவராக வேறு செல்ல இருக்கிறார்.
உலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா மே 17 -ம் தேதி தொடங்கி மே 28 வரை நடைபெறவிருக்கிறது. இந்தத் திரைப்பட விழாவின் இறுதியில் Palme d’Or என்று அழைக்கப்படும் தங்க பனை விருதுக்கு உரிய படத்தை இந்த நடுவர்கள் தேர்வு செய்வார்கள். ஏற்கெனவே இந்தியாவில் இருந்து நடுவர்களாகக் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன், சர்மிளா தாகூர், நந்திதா தாஸ், வித்யா பாலன் வரிசையில் தீபிகா படுகோனும் இணைகிறார். பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட 21 படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்ட உள்ளன.
தீபிகா படுகோன் நடித்து சமீபத்தில் வெளியான Gehraiyaan திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ’83 படத்தின் தயாரிப்பிலும் தீபிகா படுகோன் பணியாற்றினார். ஹாலிவுட்டில் வின் டீசலுடன் நடித்த XXX படம் உலகம் முழுவதற்குமாக அவரை கொண்டு சேர்த்தது. இந்தச் செய்தியை தீபிகா படுகோன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங் அவரது பதிவில் ‘வாவ்’ என்று கமெண்ட் செய்து வாழ்த்தியிருக்கிறார். அவரது ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளையும் அன்பையும் பகிர்ந்து வருகிறார்கள்.