ஏலத்தின்போது மற்ற அணிகள் எல்லாம் பாட்டு முடிந்தபின்னும் தனியாய் அவர்பாட்டுக்கு ஆடிக்கொண்டிருக்கும் நம்மூர் சிம்பு போல தனித்தனியாய் வீரர்களைத் தூக்கிக் கொண்டிருக்க, குஜராத், ஹைதராபாத் மட்டும் ராம்சரணும் ஜுனியர் என்டிஆருமாய் மாறி பௌலர்களை வரிசையாய் வாங்கி `நாட்டுக்கூத்து’ ஆடிக்கொண்டிருந்தார்கள். அதனாலேயே ஏலத்திற்கு பின்னான அளவீடுகளில் பேப்பரில் படு வீக்காய் இருந்ததும் இந்த இரண்டு அணிகள்தான்.
அதுவும் குஜராத் ரசிகர்கள் எல்லாம் ‘மிடில் ஆர்டரா? அது எங்க இருக்கு? சரி, கடமைக்கு டீமுக்கு கொடி தூக்கிட்டு அப்புறமா மும்பைக்கோ சென்னைக்கோ குடித்தனம் மாறிடவேண்டியதுதான்’ மோடில்தான் இருந்தார்கள். ஆனால் களத்தில் மாயங்கள் நிகழ்த்துவதுதானே கிரிக்கெட். பாதித் தொடர் முடிந்துவிட்ட நிலையில் டேபிள் டாப்பில் இருக்கும் முதல் இரண்டு அணிகள் இவைதான்.
அதுவும் இன்றைய ஆட்டத்தில் வென்றால் இரண்டாமிடத்தில் இருக்கும் சன்ரைஸர்ஸ் முதல் இடத்திற்கு வந்துவிடும் என்கிற நிலை. குஜராத் அணியில் எந்த மாற்றங்களுமில்லை. சன்ரைஸர்ஸ் அணியில் கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக ஆடாமலிருந்த வாஷிங்டன் சுந்தர் மறுபடியும் உள்ளே வந்தார். அதனால் சுச்சித் வெளியே.
முதல் ஓவர் ஸ்விங் ஷமி. ‘என் பந்தை பேட்ஸ்மேன் அடிச்சு அது பவுண்டரி போனா எனக்கு அசிங்கம்’ என்பதுபோலவே இரண்டு வைட் பந்துகளில் அவராகவே பவுண்டரிகள் கொடுத்து சிறப்பாய்த் தொடங்கி வைத்தார். அடுத்து வந்த யஷ் தயால் ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள். ‘சும்மா சும்மா மொக்கை வாங்க நான் என்ன சாமி -2 வா? சாமி பார்ட் ஒன்’ என அடுத்த ஓவரில் பந்தை சர்ரென உள்ளே இறக்கி வில்லியம்சனைத் தாண்டி ஸ்டம்பைத் தெறிக்கவிட்டார் ஷமி. அதனாலேயே அடுத்த ஓவரில் ரன்ரேட் மட்டுப்பட்டது.
ஐந்தாவது ஓவர் மீண்டும் ஷமி. ‘உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். ஓவர் முழுக்க நீ அடிப்பியாம். கடைசி பால் நான் விக்கெட் எடுப்பேனாம். ஓகே?’ என பேசிவைத்தது போல திரிபாதியை வெளுக்கவிட்டு கடைசி பாலில் பெலிவியனுக்கு அனுப்பினார். அபிஷேக் சர்மாவோடு ஜோடி சேர்ந்தார் மார்க்ரம். பூரண் விஞ்ஞானத்திற்கே வீம்பாய் சவால் விடக்கூடியவர். பால்வீதியையே தொட்டுவிட்ட அறிவியல் கணித சமன்பாடுகளால் பூரண் எந்த மேட்ச்சில் ரன் அடிப்பார் என்பதை மட்டும் இம்மியளவுகூட கணிக்க முடியாது. காயத்திலிருந்து மீண்டிருக்கும் சுந்தரின் பார்மும் கேள்விக்குறியே. எனவே ஒரு விக்கெட் விழுந்தாலும் அணிக்கு சிக்கல் எனத் தீர்மானித்து மிக நிதானமாக ஆடினார்கள் இருவரும்.
ரஷித் கான் இருக்கும் அணியில் அவர்தான் மிடில் ஓவர் பௌலர். அதனால் ஹர்திக் அவரைக் கூப்பிட்டு வர, `ஒருகாலத்துல நானும் அவரும் `ப்ரெண்ட்ஸ்’ விஜய் – சூர்யா மாதிரி. இப்போ `நேருக்கு நேர்’ விஜய் – சூர்யா மாதிரி என ரஷித்தை மார்க்ரம் பக்கமே போகவிடாமல் அணைகட்டி தடுத்து சிக்ஸருக்கும் பவுண்டரிக்குமாய் பறக்கவிட்டார் அபிஷேக் சர்மா.
ரஷித் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸர், அடுத்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் என அபிஷேக் அடித்ததைப் பார்த்து சீனியர் வீரர்களே சிலிர்த்துப் போனார்கள். விளைவு ஸ்கோர் 12 ஓவர்கள் முடிவில் 112/2. சிக்ஸரோடு தன் அரைசதத்தையும் கடந்தார் அபிஷேக்.
அடுத்து வந்த பெர்குசனையும் பேட்ஸ்மேன்கள் இருவரும் விரட்டி விரட்டி அடிக்க, மீண்டும் ரஷித்தை கொண்டுவர வேண்டிய நிலைமை. இத்தனைக்கும் ஹர்திக், திவேதியா என இரு ஆல்ரவுண்டர்கள் இருந்தும் ஐந்து பௌலர்களை மட்டுமே கடந்த சில ஆட்டங்களாக ஏன் பயன்படுத்துகிறார் என்பது கேப்டன் ஹர்திக்குக்கே வெளிச்சம். ரஷித் வீசிய 15வது ஓவரில் மட்டும் 13 ரன்கள். நான்கு ஓவர்களில் ரஷித் கொடுத்தது 45 ரன்கள், அதுவும் விக்கெட்டே இல்லாமல். ‘பசங்களை எப்படி ட்ரெயின் பண்ணியிருக்கேன் பாத்தியா?’ என ஒருபக்கம் பேட்டிங் கோச் பிரையன் லாரா காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம், ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து’ பாடிக்கொண்டிருந்தார் ஹெட் கோச் டாம் மூடி.
ஒருவழியாய் 16வது ஓவரில் அல்ஸாரி ஜோசப் அபிஷேக் ஷர்மாவை அவுட்டாக்க, ரன்ரேட் சட்டென குறைந்தது. அடுத்துவந்த பூரணிடம் மீண்டுமொருமுறை அறிவியல் கணித சமன்பாடுகள் டெபாஸிட் கூட வாங்காமல் தோற்றுப்போக, மூன்றே ரன்களில் நடையைக் கட்டினார். 18வது ஓவரின் முடிவில் அரைசதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த மார்க்ரமும் அவுட்! ஸ்கோர் 161/5.
அடுத்ததாய் வந்த ஷஷாங்க் சிங்கிற்கு கணக்குப்படி இது ஆறாவது ஆட்டம். ஆனால் முன்னர் ஆடிய ஐந்து ஆட்டங்களிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் புண்ணியத்தில் இவர் ஒரு பந்துகூட பேட்டிங் ஆடவில்லை. `இப்பயாவது வழிய விட்டீங்களே அய்யா’ என கடைசி நேரத்தில் கன்பார்ம் டிக்கெட் கிடைத்த பயணிபோல விறுவிறுவென உள்ளே வந்தார். வந்து சந்தித்த முதல் பந்தே பவுண்டரி.
‘இதென்ன பிரமாதம், ஸ்பெஷல் ஐட்டமெல்லாம் இருக்கு’ என பெர்குசன் வீசிய கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ்ர்கள். அதுவும் மிட்விக்கெட்டில் ப்ளாட்டாக, பின்னால் ஒரு ஸ்கூப், லாங் ஆப்பில் தூக்கி அடித்து… என திசைக்கொன்றாகப் பறக்கவிட்டார். அவரின் டைமிங்கும் புட்வொர்க்கும் சன்ரைஸர்ஸ் அணியை 195 ரன்களில் கொண்டுவந்து நிறுத்தியது. ஷஷாங்க் மட்டும் 6 பந்துகளில் 25 ரன்கள்.
இரண்டாவது இன்னிங்க்ஸின் முதல் ஓவர் புவி. அவரைப் பொறுத்தவரை விக்கெட் வாங்குகிறாரோ இல்லையோ ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்திருப்பார். முதல் ஓவரில் இரண்டே ரன்கள். பிரஷர் பேட்ஸ்மேன்கள் பக்கம் ஏற, அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் தட்டிவிட்டார் சாஹா. அதற்கடுத்த புவி ஓவரிலும் நடராஜன் ஓவரிலும் சாஹா தாண்டவமாட, ஸ்கோர் பவர்ப்ளே முடிவிலேயே 59 ரன்களைத் தொட்டது. வாஷிங்டன் சுந்தராலும் ரன்ரேட்டை கட்டுப்படுத்த முடியாமல் போக, ஜம்மு எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்கை அழைத்துவந்தார் வில்லியம்ஸன். கைமேல் பலன். கில் காலி!
செம பார்மிலிருக்கும் ஹர்திக்கையும் தன் அடுத்த ஒவரில் வழியனுப்பி வைத்தார் உம்ரான். ஆனாலும் மறுபக்கம் விடாப்பிடியாய் நின்று போராடினார் சாஹா. டெஸ்ட்டோ டி20யோ ஆடும் ஆட்டத்தைப் பொறுத்து அந்த பார்மெட் பேட்ஸ்மேனாகவே மாறிவிடுவது சாஹா ஸ்டைல். ஆனாலும் பண்ட், இஷான் கிஷன், ராகுல், தினேஷ் கார்த்திக், சாம்சன் என டி20 ஸ்பெஷலிஸ்ட்கள் அத்தனை பேரும் கீப்பர்களாய் இருப்பதால் இவருக்கு இத்தனை நாள்களாய் ப்ளேயிங் லெவனில் இடம்கிடைப்பதே அதிசயமாய் இருந்தது. ஐ.பி.எல் தொடங்கியகாலம் தொட்டே ஆடிவரும் சாஹா பார்மில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அணியிலிருந்து பந்தாடப்படுவார். இந்த சீசனில் எக்ஸ்ட்ரா இரண்டு அணிகள் என்பதால் இன்னும் இரண்டு முன்னணி இந்திய கீப்பர்களுக்கான வெளி பிறக்க சாஹாவுக்கு மீண்டுமொரு முறை அடித்தது யோகம். இத்தனையும் அவர் மனதிற்குள் ஓடியதோ என்னவோ அதிரடியாக ஆடி 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின்னும் சளைக்காமல் அவர் அடிக்க, ஸ்கோர் 13 ஓவர்கள் முடிவில் 121/2.
மீண்டும் உம்ரான் வந்தே ஸ்கோருக்கு ஸ்பீட்பிரேக்கர் போடவேண்டியது இருந்தது. 152 கி.மீ வேகத்தில் அவர் வீசிய பந்து புயலாய் வந்து சாஹா சுதாரிப்பதற்குள் ஸ்டம்ப்பை பெயர்த்தது. மூன்று ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வாங்கியிருந்தார் உம்ரான். இன்னொருபக்கம் தன் மூன்றாவது ஓவரை புவியும் டைட்டாக வீச, பிரஷர் எகிறியது குஜராத் அணிக்கு. ‘இப்பப் பாருங்க பிபி சந்திரயான் மாதிரி சல்லுனு மேலே எகிறும்’ என தன் கடைசி ஓவரில் மில்லரையும் அபினவ் மனோகரையும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பி வாணவேடிக்கை காட்டினார் உம்ரான்.
4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள். இந்த சீசனின் பெஸ்ட் பௌலிங் ஸ்பெல் இது. உம்ரான் மாலிக்கின் முதல் ஐந்து விக்கெட் இன்னிங்க்ஸ். குருநாதர் ஸ்டெயின் முகத்தில் பெருமை தாங்கவில்லை. ஸ்டெயினையும் பிரெட் லீயையும் கலந்த ஸ்டைலில் களத்தில் சாதனையைக் கொண்டாடினார் சிஷ்யர் உம்ரான்.
இப்போது தேவை நான்கு ஓவர்களில் 56 ரன்கள். 17வது ஓவரை வீசிய நடராஜன் வெறும் ஒன்பது ரன்களே கொடுத்தார். தன் கடைசி ஓவரை வீசிய புவி ஒரு சிக்ஸரை போட்டுக்கொடுக்க, அதிலிருந்து தனக்கான கான்பிடென்ஸை சம்பாதித்துக்கொண்டார் ரஷித். மறுபடியும் நட்டு. திவேதியாவைப் பொறுத்தவரை `7ஜி ரெயின்போ காலனி’ ஹீரோ ரவிகிருஷ்ணாவைப் போலத்தான். அவர் ரியாக்ஷனே காட்டமாட்டார். ஆனால் படம் ஹிட்டடித்துவிடும். `ஐஸ்மேன்’ திவேதியாவும் அப்படியே. கூலாய் 13 ரன்கள் அந்த ஓவரில் எடுக்க கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவை 22 ரன்கள்.
மார்க்கோ ஜென்சன் வீசிய முதல் பந்தே திவேதியா பேட்டில் பட்டு சிக்ஸர். அடுத்த பந்து ஸ்லோ பவுன்சர். அதை திவேதியா சிங்கிளுக்குத் தட்ட இப்போது நான்கு பந்துகளில் 15 ரன்கள் தேவை. ‘என் பௌலிங்கைத்தானே கணிச்சு உங்களால ட்ரெயின் பண்ண முடிஞ்சது. பேட்டிங்கை இல்லையே’ என சன்ரைஸர்ஸ் டக் அவுட்டைப் பார்த்து முடியை சிலுப்பியபடி ரஷித் சிக்ஸர் அடிக்க இப்போது மூன்று பந்துகளில் ஒன்பது ரன்கள் தேவை. அடுத்த பந்தை காற்றில் சுற்றி வீணடித்தார் ரஷித்.
இனிவரும் இரண்டு பந்துகளையும் குறைந்தது பவுண்டரிக்கு அனுப்பினால் மட்டுமே சூப்பர் ஓவராவது வரும் என்கிற நிலை. ‘இந்த ரஷித் மார்க்கெட்ராஜா மாதிரி ப்ளாப் படம் கிடையாது. ராக்கெட் ராஜா மாதிரி ஹிட்டு படம்’ என கடைசி இரண்டு பந்துகளையும் ஸ்டைலாக சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு டைட்டன்ஸை வெற்றிக்கோட்டைத் தாண்ட வைத்தார். களிப்பிலும் கடுப்பிலும் அவர் வெறியாகி ஓட மொத்த டைட்டன்ஸ் டக் அவுட்டும் அவரைத் துரத்த மறுபக்கம் தலையைத் தொங்கபோட்டது ஹைதராபாத் முகாம்.
தோற்றிருந்தாலும் தன் பெருமுயற்சிக்காகவே ஆட்டநாயகன் விருதை வென்றார் உம்ரான். ரிசல்ட்டைப் பொறுத்தவரை இரண்டு அணிகளையுமே இந்த முடிவு பெரிதாக பாதிக்கப்போவதில்லை. கடந்த முறை தோற்றதற்கு இந்த முறை பழிதீர்த்துக்கொண்டது டைட்டன்ஸ். மிடில் ஆர்டர் பிற அணிகளைப் போல இல்லையென்றாலும் ஆட்டத்திற்கு ஒருவர் டீமை தன் தலையில் சுமந்து வெற்றியைத் தொடவைப்பதால் முதலிடத்தில் இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ்.
ஏல ரீட்டெயின் வழியே உம்ரான் என்னும் வைரத்தைக் கண்டெடுத்திருக்கும் சன்ரைஸர்ஸ் அதே ரீட்டெயினின் வழியே கோட்டைவிட்ட ரஷித் காரணமாக ஒரு மேட்ச்சை இழந்திருக்கிறது. எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த ஆட்டத்தில் எல்லாக் கணக்குகளும் சரிதான்.