இந்தியாவில் ஏற்கெனவே எரிபொருள் விற்பனை விலை, கோடைகால வெயிலைவிட அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இப்போது அடுத்த அதிர்ச்சி இந்தோனேஷியாவின் அறிவிப்பால் வந்துள்ளது. அந்நாட்டில் அதிகரித்து வருகிற பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து வகையான எண்ணெய் ஏற்றுமதிகளையும் தடை செய்திருக்கிறது இந்தோனேஷியா அரசு.
இந்தோனேஷியா பாம் ஆயில் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிப்பது. இந்தியா தன்னுடைய எண்ணெய் தேவைக்காக இந்தோனேஷியாவைதான் சார்ந்திருக்கிற அவசியம் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் 8 மில்லியன் டன் எண்ணெய் இந்தோனேஷியாவில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஏற்கனவே உக்ரைன் -ரஷ்யா போரால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிப்புக்குள்ளானது.
இந்தியாவின் வணிக ரீதியான உணவுப் பொருட்கள் தயாரிப்பு தொடங்கி வீட்டுப் பயன்பாடு வரை பாம் ஆயில் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இந்தத் தடையால் எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு உண்டாகி உணவு பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கும்.
பாம் ஆயில் உற்பத்தியில் அடுத்த இடம் வகிக்கும் மலேசியாவில் இருந்து கொள்முதல் செய்து ஈடுகட்டலாம் என்றால் ஏற்கெனவே கொரோனா சூழலால் அங்கு தொழிலாளர்கள் பற்றாற்குறை நிலவி வருகிறது. இந்தோனேஷியாவின் ஆண்டு உற்பத்தி 30 மில்லியன் டன். மலேசியாவின் உற்பத்தி 18 டன்கள் மட்டுமே. பேக் செய்யப்பட நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் உணவு பொருட்கள் விலை அதிகரிக்கும். இது மறைமுக பல பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும். இந்தோனேஷியாவின் தடை சில வாரங்களுக்கு தான் நீட்டிக்கும் என அங்கிருந்து தகவல்கள் கிடைத்தாலும் இந்தியாவின் உணவு சந்தை அபாயகரமான விலையேற்றத்தை எதிர்கொள்ளவே வேண்டி வரும் என எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.