மிசிசிப்பி:
அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியில் பிராட்வே இன் எக்ஸ்பிரஸ் ஓட்டல் உள்ளது. நேற்று இந்த ஓட்டலில் 200க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். இதில் ஏராளமான சிறுவர்களும் அடங்குவர்.
அப்போது ஒரு மர்மநபர் அங்கு வந்தான். திடீரென அவன் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் ஓட்டலில் இருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டான். இதில் ஓட்டல் அதிபர் முகமது மோசினி மற்றும் வேலையில் இருந்த ஊழியர்கள் லாரா லெகமேன் சாத் ஜிரின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்து இறந்தனர்.
மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் வில்லியம் (வயது 52) என்பவரும் இறந்தார்.
இதனை பார்த்த சாப்பிட்டுக்கொண்டு இருந்த பொதுமக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மர்ம ஆசாமி ஓட்டலில் இருந்த ஒரு அறைக்குள் புகுந்தான்.
உடனே போலீசார் அவன் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவன் குண்டு பாய்ந்து இறந்தான். விசாரணையில் அவனது பெயர் ஜெர்மி அலே சுந்தர் என்பது தெரியவந்தது. போலீசார் அவனை பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமெரிக்காவில் சமீப காலமாக பொதுமக்கள் மீது நடந்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.