புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,303 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 39 பேர் தொற்றால் உயிரிழந்தனர். இந்நிலையில், நாடு முழுவதும் 6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (ஏப்.28) தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அன்றாட கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விரிவான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,303 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4,30,68,799 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,563 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். அதேவேளையில் கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் தொற்றில் இறந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5.23,693 ஆக உள்ளது.
கரோனா பாதிப்பைப் பொறுத்தவரை டெல்லியில் அதிகபட்சமாக 1,367 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அடுத்தபடியாக ஹரியானாவில் 535 பேருக்கும், கேரளாவில் 341 பேருக்கும், உ.பி.யில் 258 பேருக்கும், மகாராஷ்டிராவில் 186 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் 16,279 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கும் சூழலில் டெல்லி, தமிழகம், கர்நாடகா, ஹரியானா மாநிலங்களைத் தொடர்ந்து கேரளாவும் மீண்டும் மாஸ்க் கட்டாயம் என்ற விதிமுறையைக் கொண்டுவரவுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மட்டும் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று மாலை நிலவரப்படி 77 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.
6 முதல் 12 வயதுடையோருக்கு தடுப்பூசி: நாடு முழுவதும் 6 முதல் 12 வயதில் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. டிஜிசிஐ எனப்படும் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையரகம் அனுமதி அளித்ததை எடுத்து தடுப்பூசி பணி தொடங்கியுள்ளது. பள்ளிகளில் கரோனா பரவுவதை இந்தத் தடுப்பூசி திட்டம் மூலம் வெகுவாகத் தடுக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் 5 முதல் 11 வயதிலான குழந்தைகளுக்கு கார்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக பல தடுப்பூசிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் அனுமதி காரணமாக இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போர் வலுவாகியுள்ளது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.