புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று புதிய பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,303 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 13-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 3,116 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த 1½ மாதங்களில் இல்லாத அளவில் இன்று பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
தலைநகர் டெல்லியில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 1,367 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரியானாவில் 535 பேர், கேரளாவில் 341 பேர், உத்தரபிரதேசத்தில் 258 பேர், மகாராஷ்டிராவில் 186 பேர், கர்நாடகாவில் 126 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 68 ஆயிரத்து 799 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 36 மரணங்கள் மற்றும் உத்தர பிரதேசம், டெல்லி, அரியானாவில் நேற்று தலா ஒருவர் என மேலும் 39 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,23,693 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2,563 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 28 ஆயிரத்து 126 ஆக உயர்ந்தது.
தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,980 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 701 அதிகம் ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை 188 கோடியே 40 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 19,53,437 டோஸ்கள் அடங்கும்.