இந்தியாவில் பல மாநிலங்களின் வெப்பநிலை.. 45 டிகிரி செல்ஷியஸ்! . தொடரும் மின் தடையால் மக்கள் அவதி| Dinamalar

புதுடில்லி-நாடு முழுதும், கோடை காலம் துவங்கியது முதல் கடும் வெப்பம் பதிவாகி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களின் வெப்பநிலை 45 டிகிரி செல்ஷியசை தொட்டுள்ளது.

பல மாநிலங்களில் அடிக்கடி மின் தடையும் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.கோடை காலம் துவங்கி படிப்படியாக உயரும் வெப்பநிலை, அக்னி நட்சத்திரம் துவங்கியவுடன் உச்சம் தொடுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே முந்தைய ஆண்டை விட வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கோடை துவங்கியது முதலே உஷ்ணம் வாட்டி வதைக்கிறது. எச்சரிக்கைஇந்த ஆண்டிலும் விதிவிலக்கில்லாமல் கோடை வெயில் துவங்கிய ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெப்பம் உயரத் துவங்கியது. பல்வேறு மாநிலங்களிலும் வெப்பநிலை 40 – 45 டிகிரி செல்ஷியசை தொட்டுள்ளது.’நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் உயரும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் வெப்பநிலை 45 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவாகி உள்ளது. ‘இந்த ஐந்து மாநிலங்களில், அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை அடிக்கும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின், கடும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ‘பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டில்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், நாளை புழுதிப் புயல் வீசும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே நாளில், அருணாச்சல பிரதேசத்தில் கடும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அசாம் மற்றும் மேகாலயாவிலும், நாளை முதல் மே 2ம் தேதிக்குள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.ஒருபுறம் வெப்பம் அதிகரிக்கும் நிலையில், மறுபுறம் நாடு முழுதும் தொடர் மின் தடைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். பிரச்னைகுறிப்பாக மஹாராஷ்டிராவின் அனைத்து முக்கிய அனல் மின் நிலையங்களிலும், இன்னும் இரண்டு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால், அம்மாநிலம் கடும் மின் தடையால் அவதிப்பட்டு வருகிறது.மின் தடையை சமாளிக்க, குஜராத் மற்றும் ஆந்திராவில் தினமும் நான்கு மணி நேரம் தொழிற்சாலைகளில் மின் தடை அமலில் உள்ளது.

இந்த நடைமுறையை ராஜஸ்தான் மாநிலமும் பின்பற்ற துவங்கி உள்ளது. மேலும், கிராமப்புறங்களிலும் நான்கு மணி நேரம் மின் தடை செய்யப்படுவதால், பாலைவன நகரங்களில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.ஜம்முவில் நேற்று 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு இங்கு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதேபோல, ஒடிசாவிலும் தொடர்ந்து மூன்றாவது நாளாக கடும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதையடுத்து, இம்மாத இறுதி வரை ஒடிசாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேற்கு வங்கத்திலும் பள்ளி, கல்லுாரிகளை மே 2ம் தேதிக்கு மேல் திறக்க வேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த 122 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு, மார்ச் மாதத்தின் சராசரி வெப்பநிலை வடமேற்கு மாநிலங்களில் இந்தாண்டு கடுமையாக உயர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

latest tamil news

‘மனித நடவடிக்கையே காரணம்!’ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லுாரி ஆய்வாளர் டாக்டர் மரியம் சக்காரியா கூறியதாவது:இந்தியாவில் கோடை காலம் துவங்கிய உடனேயே வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரித்துள்ளதற்கு, பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமே காரணம். மனிதர்களின் நடவடிக்கைகளால் இந்த பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது.

இதன் காரணமாக இயற்கையில் மாறுபாடு ஏற்படுகிறது. இதற்கு முன், இது போன்ற அதிகபட்ச வெப்பநிலை 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவாகும். இப்போது, இது சர்வ சாதாரணமாக நிகழத் துவங்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.