இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும் என்று ட்வீட் செய்திருந்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி எப்போதுமே தேசிய மொழியாகாது. நமது தேசத்தின் மொழி பன்முகத்தன்மையை மதிக்க வேண்டியது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் கடுமையாகும். ஒவ்வொரு மொழிக்கும் வளமான வரலாறு உண்டு. அதில் அந்தந்த மொழி பேசும் மக்களுக்குப் பெருமிதமும் உண்டு. அந்த வகையில் நான் பெருமித கன்னடிகா” என்று பதிவிட்டுள்ளார்.
வார்த்தைப் போரின் பின்னணி இதுதான்… ‘விக்ரம் ராணா’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிச்சா சுதீப், “இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்களை தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்கிறார்கள். ஆனாலும் வெற்றி காண்பதில் அவர்கள் தோல்வி அடைகிறார்கள்” என்று பேசியிருந்தார்.
எதிர்பாராத விதமாக கிச்சா சுதீப்பின் இந்த கருத்துக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் எதிர்வினை ஆற்றத் தொடங்கினார். “சகோதரர் கிச்சா சுதீப், இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்” என்று இந்தியில் பதிவிட்டார் அஜய் தேவ்கன்.
அதற்கு கிச்சா சுதீப், தனது பதிவில், “நான் பேசியதன் பொருள் தவறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறன் சார். நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படிச் சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். புண்படுத்த வேண்டும் என்றோ விவாதம் செய்ய வேண்டும் என்றோ நான் அப்படி சொல்லவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
தனது அடுத்த பதிவில், “நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனெனில் நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. என்னுடைய இந்தப் பதிலை ஒருவேளை நான் கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். அது உங்களால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?” என்று பதிலடி கொடுத்தார்.
இதனையடுத்து ட்விட்டராட்டிகள் காரசாரமாக இந்தி பெரிதா இல்லை தத்தம் மொழி பெரிதா என வார்த்தைப் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இப்போது கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் இந்தி தேசிய மொழி என்ற கருத்துக்கு எதிர்ப்புக்குரல் கொடுத்துள்ளார்.