கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கு பதிலளிக்கும் வகையில், இந்தி நமது தேசிய மொழி என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தெரிவித்ததையடுத்து, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், சோனு சூட், மதுபாலா, பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்து குறித்து காணலாம்.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், “பான் இந்தியா படங்கள் தற்போது உருவாகி வருகிறது. இந்தி தேசிய மொழி இல்லை” என்று தெரிவித்தார். இதையடுத்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், “இந்தி தேசிய மொழி இல்லை என்றால், உங்களது தாய்மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி தான் நமது தாய் மொழி. தேசிய மொழியாகவும் எப்போதும் இருக்கும். ஜன கன மன” என்று இந்தியில் நடிகர் கிச்சா சுதீப்புக்கு ட்விட்டரில் பதிலளித்தார்.
இதனைத்தொடர்ந்து, அவருக்கு பதிலளித்த நடிகர் கிச்சா சுதீப், “எனது கருத்தை தவறாக புரிந்துகொண்டீர்கள், நேரில் பார்க்கும்போது கூறுகிறேன்” என்று தெரிவித்த அவர், தனது அடுத்தப்பதிவில், “நீங்கள் இந்தியில் அனுப்பிய உரை எனக்குப் புரிந்தது. நாங்கள் அனைவரும் இந்தியை மதித்து, நேசித்து, கற்றுக்கொண்டோம். ஆனால் எனது பதிலை கன்னடத்தில் தட்டச்சு செய்தால், உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ‘‘நான் எப்போதுமே சினிமா துறையை ஒன்றாகத்தான் நினைத்தேன். நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், எங்கள் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை, மொழிபெயர்ப்பில் ஏதாவது தவறுகள் நிகழ்ந்திருக்கலாம்” என்று இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர்களின் இந்த ட்விட்டர் வாக்குவாதம் வைரலாகி பெரும் பேசுபொருளானது.
இதனால் பாலிவுட் ரசிகர்கள், அஜய் தேவ்கனுக்கு ஆதரவாகவும், தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் தாய்மொழிக்கு ஆதரவாகவும் ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழி சார்ந்த திரையுலகிலும் கோலோச்சி வரும் சோனு சூட், மதுபாலா, பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்து குறித்து பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் பல ஆண்டுகளாக கலக்கி வரும் நடிகர் சோனு சூட் “இந்தி தேசிய மொழி அல்ல. இந்தியாவில் ஒரு மொழி உண்டு என்றால், அது பொழுதுபோக்கு தான். நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. நீங்கள் மக்களை மகிழ்வித்தால், அவர்கள் உங்களை நேசிப்பார்கள், உங்களை மதிப்பார்கள், உங்களை ஏற்றுக்கொள்வார்கள். தென்னிந்திய திரைப்படங்களின் வெற்றி இந்தி திரைப்படங்கள் தயாரிக்கப்படும் விதத்தை மாற்றும். திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போது பார்வையாளர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். மக்கள் ஒரு சராசரி படத்திற்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை கொட்டி படம் பார்க்க மாட்டார்கள். நல்ல சினிமா மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேபோல் நடிகை மதுபாலா, “நமக்கு ஒரு பொதுவான மொழி தேவை. கலைக்கு மொழி தேவையில்லை. இசையும், கலையும் மனதால் புரிந்து கொள்ளப்படுகின்றன. மொழி என்பது அதிகமான மக்களிடம் ஒரு கருத்தை கொண்டு செல்வதற்கான கருவி மட்டுமே. தமிழில் 1991-ம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படம், குறிப்பிட்ட ஆடியன்ஸ்களிடம் மட்டுமே கொண்டு சேர்த்தது. ஆனால், அதே 1994-ல் இந்தியில் அந்தப் படம் வெளியானபோது, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தி விருப்பமானது என்பது எனக்கு வருத்தமளிக்கிறது, ஏனெனில் அரசியல் ரீதியாக அது மனிதர்களை இணைக்கும் கருவியை பறிக்கிறது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், நம்மை பிரிக்க மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைவருக்கும் புரியும் ஒரு மொழியை ஏற்க எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். ‘ரோஜா’ படத்தில் கூட ஒரு தென்னிந்திய பெண் பஞ்சாப் சென்று அங்குள்ளவர்களுடன் மொழி தெரியாமல் அவர்களை அணுக முடியாமல் தவிக்கிறாள். அந்த வகையில், மொழி மனித மனங்களுக்கிடையேயான தொடர்பைத் தடுக்கிறது. அங்குதான் மொழி வருகிறது. இது மொழி பற்றியது அல்ல, ஆனால் மனிதர்களுடன் தொடர்பு கொள்ள மொழி தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், கோலிவுட், பாலிவுட்டில் பல ஆண்டுகாலமாக பின்னணி பாடகராக பாடி வரும் பாடகர் ஸ்ரீநிவாஸ், அஜய் தேவ்கனின் ட்வீட்டை டேக் செய்து, “இந்தியாவிற்கு நீங்கள் பிரதமராக இருப்பதுபோல், இந்தியும் நமது தேசிய மொழிதான் சார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், இந்தியா டுடேக்கு அளித்துள்ள பேட்டியில், “மக்களை பிரிக்க வேண்டாம். அஜய் தேவ்கனின் ட்வீட் எனக்கு முரண்பாடாக இருந்தது. ஏனெனில், அவர் ‘ஜன கன மன’ என்று ட்வீட்டில் எழுதியுள்ளார். ‘ஜன கன மன’ பெங்காலி என்று நினைக்கிறேன். அப்படி இருக்கும்போது, இந்தி நமது தேசிய மொழி என்று கூறுகிறார். எனக்கு இந்தி தெரியும், இந்தி பாடல்கள் பாடுவேன். அதற்குக் காரணம் அந்த மொழியை என்னால் புரிந்து கொள்ள முடிந்ததுதான். உதாரணமாக தஞ்சைக்குப் போய் இந்தியில் பேசினால் அங்கு உள்ள கடைக்காரருக்குப் புரியாது. நாம் நமது நாட்டின் பன்முகத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும், மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது” என்று கூறியுள்ளார்.