வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்தோனேசியாவின் தூதுவர் மாண்புமிகு திருமதி. டெவி குஸ்டினா டோபிங்கை 2022 ஏப்ரல் 27ஆந் திகதியாகிய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து வரவேற்றதுடன், இந்தோனேசியா அரசாங்கத்தின் இலங்கைக்கான மனிதாபிமான உதவியின் புதிய தகவல்கள் குறித்து இந்தோனேசியத் தூதுவர் விளக்கினார்.
இலங்கையின் சுகாதார அமைச்சின் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான கோரிக்கைக்கு இணங்க, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய 517.5 மில்லியன் இலங்கை ரூபா (அண்ணளவாக 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான 3.1 தொன் அளவுடைய மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு வசதியாக, இந்தோனேசியா அரசாங்கம் இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும் இந்தோனேசியாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி அலுவலகத்தின் ஆலோசனையுடன், சுகாதார அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியாவின் மருந்துத் துறையுடன் இணைந்து பணியாற்றியதாக தூதுவர் டோபிங் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
மனிதாபிமான உதவிகள் இரண்டு தொகுதிகளாக இலங்கையை சென்றடையும் என்றும், ஜகார்த்தாவில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் 2022 ஏப்ரல் 28ஆந் திகதி வியாழனன்று முதலாவது கப்பல் வந்து சேரும் என்றும் தூதுவர் குறிப்பிட்டார். மீதித் தொகை 2022 மே 08ஆந் திகதி, ஞாயிற்றுக்கிழமை வந்தடையும். சுகாதார அமைச்சின் வேண்டுகோளைத் தொடர்ந்து, இந்தோனேசிய அதிகாரிகளும் மருந்து மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் துறையும் பத்து நாட்களில் ஒன்றிணைந்து உதவிகளை விரைவாக அனுப்புவதை உறுதிசெய்யும் வகையில் பொருட்களை நன்கொடையாக வழங்கியதுடன், அதன் நீண்டகால நெருங்கிய நட்பைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கு தேவைப்படும் நேரத்தில் ஆதரவளிப்பதில் மகிழ்ச்சியடைந்ததாக தூதுவர் அமைச்சரிடம் தெரிவித்தார்.
இந்தோனேசியா அரசாங்கம் மனிதாபிமான உதவிகளை தாராளமாக வழங்கியமைக்கு இலங்கை அரசாங்கத்தின் ஆழ்ந்த பாராட்டுக்களை தூதுவரிடம் தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவின் தெளிவான வெளிப்பாடாகும் எனக் குறிப்பிட்டார். இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் மற்றும் சர்வதேச அரங்கில் கடல் பிரச்சினைகள் மற்றும் செயன்முறைகளில் ஒத்துழைப்பையும், உலக அரங்கில் பிரச்சினைகளை புறநிலையாக தீர்க்க அணிசேரா இயக்கத்தில் நெருக்கமாக பணியாற்றுவதையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தோனேசியாவின் வெளிநாட்டு அமைச்சர் மாண்புமிகு ரெட்னோ மர்சுடியுடன் கிளாஸ்கோவில் ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் சந்தித்ததையும், சமீபத்தில் கத்தாரில் உள்ள தோஹா மன்றத்தில் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியதையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் நினைவு கூர்ந்தார். இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இந்த வருடத்தின் பிற்பகுதியில் வெளிவிவகார பிரதியமைச்சரை வரவேற்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஏப்ரல் 28