உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யாவின் அக்கிரமிப்புப் போரானது இன்னும் முடிவடையாமல், மூன்றாவது மாதத்தையும் தொட்டுவிட்டது. போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக இரு நாட்டு தரப்பினரும் பலமுறை பேச்சுவார்த்தை மேற்கொண்டும் இதுவரை போரை நிறுத்தும் அறிகுறியாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், இரு தினங்களுக்கு முன்பு ஐ.நா பொதுச்செயலாளரைச் சந்தித்த ரஷ்ய அதிபர் புதின், `உக்ரைனில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தாலும், பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடுகளை எட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்’ எனக் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் கடந்த வாரம், உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா கூறியிருந்த நிலையில், உக்ரைன் பொதுமக்களின் வெளியேற்றத்துக்காக மரியுபோல் நகரில் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அண்மையில் ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், `உள்ளூர் நகராட்சி அமைப்புகளைக் கலைத்து உக்ரைனை சரணடையவைப்பதே ரஷ்யாவின் திட்டம்!’ என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஐரோப்பாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க தூதர் மைக்கேல் கார்பென்டர்(Michael Carpenter), “ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளில் புதிய நிர்வாகக் கட்டமைப்புகள் விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்பதே ரஷ்யாவின் நோக்கமாக இருக்கிறது. மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கான திட்டம் என்பது, உக்ரைனில் உள்ள அனைத்து உள்ளூர் நகராட்சி அரசாங்கங்களையும் கலைத்து, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரைன் அரசைக் கட்டாயமாக சரணடையவைப்பதை உள்ளடக்கியது என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது” என்று கூறினார்.