லக்னோ: உத்தரபிரதேசத்தில் மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து 72 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், மத வழிபாட்டுத் தலங்களில் முன் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளை அகற்றவும் அனுமதி பெற்ற ஒலிபெருக்கிகளில் ஒலி அளவை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவுக்கு கட்டுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஒலிபெருக்கிகளுக்கான சட்ட விதிமுறைகளை பின்பற்றுமாறு மாநிலம் முழுவதிலும் உள்ள கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள், தேவால யங்கள் மற்றும் திருமண மண்டப நிர்வாகிகளை மாநில உள்துறை கேட்டுக்கொண்டது. மேலும் முதல்வரின் உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏப்ரல் 30-க்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த உத்தரவு மீது அதிகாரிகளும் போலீஸாரும் கடந்த திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.
இது தொடர்பாக மாநில காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) பிரஷாந்த் குமார் நேற்று கூறும்போது, “அரசின் உத்தரவின் அடிப்படையில் மாநிலம் முழுவதிலும் கடந்த 72 மணி நேரத்தில் 6,031 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. 29,674 ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித பாரபட்சமும் இன்றி அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தில் ஒலி மாசுபாடு ஏற்படுத்தும் கடும் விளைவுகளை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம், பொது இடங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. அவசர கால நிகழ்வுகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துள்ளது. இதனை முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் தனது ஆய்வுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.