டெல்லி : எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மாற்றான்தாய் மனபான்மையுடன் பிரதமர் மோடி நடத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையின் போது, எரிபொருள் மீதான வரியை 2021ம் ஆண்டு நவம்பர் மாதமே ஒன்றிய அரசு குறைத்துவிட்டதாக தெரிவித்தார்.ஆனால் மேற்கு வங்கம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வரியை குறைக்காமல் இருப்பதால் அம்மாநிலங்களில் மக்கள் தொடர்ந்து சிரமம் அடைந்து வருவதாக அவர் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எதிர்க்கட்சி ஆளும் முதல்வர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசே காரணம் என்று தெரிவித்தனர்.மாநிலங்கள் மீது குறைக்கூற மோடி வெட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மம்தா பேனர்ஜி பேசியதாவது. ‘மோடிக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். ஆலோசனை கூட்டம் ஒரு தரப்புக்கு ஆதரவாக உள்ளது. மாநில முதல்வர்கள் பேச வாய்ப்பு அளிக்கவில்லை. பிரதமர் மோடியின் கருத்து உடன் நான் ஒத்துப்போகவில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் மோடி நடத்துகிறார். பெட்ரோல், டீசல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு தான் குறைக்க வேண்டும்,’ என்றார். அதே போல், தெலங்கானா முதல்வர் சந்த்ரசேகர ராவ் பேசியதாவது, ‘காணொளி வாயிலாக மோடி நாடகம் நடத்துகிறார்.முதல்வர்கள் 4 மணி நேரம் அவரது பேச்சை கேட்க வேண்டும்.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி மோடி பேச வேண்டும் என்பதே கூட்டத்தின் நோக்கம். ஆனால் அவர் பேசியது வேறு விவகாரம்,’என்றார்.