மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டாம் என குறித்த குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மகிந்தவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் 100க்கும் மேற்பட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நாமலுடன் எதிர்க்கட்சியில் இணைந்து நாமலை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக குறித்த குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அதன்படி பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வ கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கலந்துரையாட நாளை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி, அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களுக்கும் ஆளும் தரப்பின் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
என்றபோதும் தொடர்ச்சியாக தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை எனவும், தன்னை பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகின்றார்.
இவ்வாறானதொரு சூழலில் ஆளும் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதுடன், பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது என நாமல் ராஜபக்ச நேற்றைய தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.