இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவைகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதலமைசர்களுடன் நேற்று கொரோனா குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ”தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காதே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம். கடந்த நவம்பர் மாதத்தில் மத்திய அரசு கலால் வரியை குறைத்தது. ஆனால் சில மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கவில்லை” என்றார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முத்த தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி பற்றாக்குறை, மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவைகளுக்கு மாநில அரசுகளே காரணம் என பிரதமர் மோடி கூறுகிறார். மொத்த எரிபொருள் வரிகளில் 68% வரியை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் பிரதமர் மோடி இது குறித்து பொறுப்பான பதில்களை கூற மறுக்கிறார். மேலும் மோடியின் கூட்டாட்சி தத்துவம் என்பது மாநிலங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் வற்புறுத்தும் வகையில் உள்ளது”என பதிவிட்டுள்ளார்.