புதுடெல்லி :
டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக தனது முதல் டுவீட்டை எலான் மஸ்க் நேற்று பதிவிட்டார். அதில் அவர் தெரிவித்ததாவது, “எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம்” என்று பதிவிட்டார்.
இந்நிலையில், எலான் மஸ்கை டுவீட் மூலம் எச்சரித்துள்ளார் நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சசி தரூர். அவர் கூறியிருப்பதாவது:-
“எந்த சமூகவலைதள நிறுவனம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து எங்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. முக்கியமல்ல.
விஷயம் என்னவென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படிச் செய்கிறார்கள் என்பதே எங்களுக்கு முக்கியம்.
டுவிட்டர் தளம் இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் குறுக்கிட்டாலோ அல்லது அதற்கு நேர் எதிராக எங்களது சூழலில் வெறுப்புப் பேச்சு மற்றும் வசை பாட அனுமதி கொடுத்தாலோ, அதன் பின்னர் ஐ.டி ஆணையக் குழு நடவடிக்கை எடுக்கும்” என எலான் மஸ்கையும் டேக் செய்து சசி தரூர் இன்று பதிவிட்டுள்ளார்.