மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின்செயல்பாடு (3 வெற்றி, 4 தோல்வி) தொடர்ந்து சீராக இல்லை. ஒரு ஆட்டத்தில் ஜெயித்தால் அடுத்த ஆட்டத்தில் தோற்று விடுகிறார்கள். முந்தைய ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி சர்ச்சைக்கு மத்தியில்15 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த பிரச்சினைகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும், பிரித்வி ஷாவும் சிறப்பாக பேட்டிங் செய்தாலும் மிடில் வரிசை அவ்வப்போது சொதப்பி விடுகிறது.
இதே நிலைமை தான் பந்து வீச்சிலும் காணப்படுகிறது. முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் 4 ஆட்டங்களில் 3-ல் வென்று நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் அடுத்த 4 ஆட்டங்களில் வரிசையாக தோற்று புள்ளி பட்டியலில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிகமானநட்சத்திர வீரர்கள் அங்கம் வகித்தாலும் கொல்கத்தாவின் ஆட்டம் ஒருசேர ‘கிளிக்’ ஆகவில்லை.
ஒரு அரைசதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் மற்ற 7 ஆட்டங்களில் 20 ரன்களை கூட தாண்டவில்லை. தொடர்ந்து 3 ஆட்டங்களில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தாத சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின்
தடுமாற்றமும் பின்னடைவாக உள்ளது. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (248 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (227 ரன் மற்றும் 10 விக்கெட்) மட்டும் ஓரளவு நன்றாக ஆடுகிறார்கள். கடந்த ஆட்டத்தில் வெளியே உட்கார
வைக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் பேட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச் களம் திரும்ப வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு (வியாழக்கிழமை) நடக்கும் 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த வெறியுடன் டெல்லி அணி களம் இறங்க உள்ளது. ஏற்கனவே தொடக்க லீக்கில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் தோல்வி அடைந்த கொல்கத்தா அணி அதற்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டி வருகிறது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.