சென்னை:
நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கவர்னர் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை. இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த தீர்மானத்தை கவர்னர் முடக்கி வைத்திருப்பதாக தமிழக காங்கிரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. கவர்னரை கண்டித்து சைதாப்பேட்டை ராஜீவ்காந்தி சிலை அருகில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி தனது தலைமையில் கண்டன பேரணி நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. சென்னை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., மற்றும் காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர்.
காங்கிரஸ் போராட்டத்தையொட்டி கவர்னர் மாளிகை மற்றும் சின்னமலை பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.