கன்னியாகுமரி மாவட்டம் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை தமிழ்த்தேர்வில் வெற்றிபெறாமல் பல ஆண்டுகளாகப் பிறமொழியாளர்கள் பலர் பணியாற்றுவது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் தமிழ் தாய்மொழி அல்லாத பிறமாநிலத்தவர் பலர், பல ஆண்டுகளாகத் துறைத் தலைவர்களாகவும், இணை பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் பணியாற்றி வரும் நிலையில் இதுவரை அவர்கள் தமிழ்மொழியை கற்றுக் கொள்ளாமலும், தமிழ்நாடு தேர்வாணையத்தின் இரண்டாம் நிலை தமிழ்த்தேர்வில் வெற்றி பெறாமலும் மக்களின் உடல்நலத்துடன் தொடர்புடைய துறையில் பணியாற்றுவதை வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து, தமிழர்களின் வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் பெருமளவு பறிபோகக்கூடிய தற்காலச் சூழலில், கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பிறமொழியினரே பெருமளவில், அனைத்து பதவிகளிலும் பணியாற்றி வருகின்றனர். அரசு விதிமுறைகளின்படி தமிழ் தாய்மொழி அல்லாத மாற்றுமொழியினர் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிப் பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை தமிழ்த்தேர்வில் வெற்றி பெற்று, தமிழ் கற்றிருக்க வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்கள் அப்பொறுப்பில் பணியாற்ற தகுதியற்றவர் என்ற அடிப்படையில் பணி நீக்கம் செய்திட வேண்டும். இவ்வாறு அரசு விதி இருக்கையில், கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத கல்லூரியில் ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் தேர்ச்சி பெறாமல் பிறமொழியாளர்கள் பணிபுரிந்து வருவது எவ்வாறு சாத்தியமாகிறது?
தமிழ்நாட்டின் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் தாய்மொழியில் பயின்ற மாணவர்கள் இக்கல்லூரியில் கல்வி கற்றுக்கொள்வதில் மிகுந்த இடர்பாடுகள் ஏற்படுவதுடன், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோய்களை பற்றி அறிந்து கொள்வதில் மொழி புரியாத மருத்துவர்கள் சிரமப்படுவதால் பொதுமக்களும் தொடர்ச்சியாகக் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள். சில நேரங்களில் நோயாளிகளுக்குத் தவறான மருத்துவம் அளிக்க நேர்கின்றதால் குழப்பங்களும் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன.
ஆகவே, தமிழக மக்களின் உயிர்ப் பாதுகாப்பு தொடர்புடைய இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் தமிழ் கற்காமல் பணியாற்றும் தகுதியற்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் உயிரை பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.