தெலங்கானா
முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவருமான
சந்திரசேகர் ராவ்
தேசிய அரசியலில் கால்பதிக்கும் பொருட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன்காரணமாகவே அண்மைக்காலங்களாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் அவர் கடுமையாக விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் 21ஆவது நிறுவன நாள் விழா அக்கட்சியினரால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், கலந்து கொண்டு பேசிய சந்திரசேகர் ராவ், தேசத்திற்கான புதிய கட்டமைப்பை அமைக்க ஒரு சிப்பாயாக பணியாற்றுவேன் என்றார். தேசிய அரசியல், அமைப்பின் செயல்பாடு, நாட்டில் உள்ள வளங்கள் மற்றும் நாடு எப்படி முன்னேற வேண்டும் என்பது குறித்து விரிவான பகுப்பாய்வு செய்யப்படும் என்று தெரிவித்த அவர், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த தேசிய அரசியலில் டிஆர்எஸ் கட்சியின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து வரும் நாட்களில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
மோடியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் ஏதாவது துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதா என்று கேள்வி எழுப்பிய சந்திரசேகர ராவ், “எதுவுமே நடக்கவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது, பொருளாதாரம் சரியில்லை, பணவீக்கம் அதிகரித்துள்ளது, விலைவாசிகள் உயர்ந்து வருகின்றன.
மத்திய அரசு
தோல்வியடைந்து மட்டுமே வருகிறது. ஆனால், ஏதோ நடக்கிறது என்று காட்ட பேச்சுகளும் பொய்களும் பரப்பப்படுகின்றன.” என்றார்.
உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக மக்களை பிளவு படுத்தவும், அரசியல் லாபத்திற்காக வெறுப்பு பரப்பப்படுவதாகவும் சந்திரசேகர் ராவ் அப்போது சுட்டிக்காட்டினார்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று தெரிவித்த பிரதமர் மோடியை கடுமையாக சாடிய அவர், தெலங்கானா மாநிலம் உருவான பிறகு, பெட்ரோல், டீசல் விலையை நாங்கள் உயர்த்தவில்லை. மத்திய பாஜக அரசு உயர்த்தியது. நாங்கள் வரியை உயர்த்தவில்லை, அப்படியிருக்கும் போது அதனை ஏன் குறைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். எரிபொருளின் மீதான வரியை மத்திய அரசே உயர்த்தியபோது அதை குறைக்க வேண்டும் என்று மாநிலங்களிடம் கேட்க மத்திய அரசு கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை என்றும் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்தார்.