உதகை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த வந்த தனிப்படையில் இடம்பெற்ற மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் டி.சுரேஷ் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு தேயிலை தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அதில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்த மாவட்ட நீதிபதி சி.சஞ்சய் பாபா இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், நீலகிரி மாவட்ட புதிய நீதிபதியாக சென்னையில் உள்ள தொழில்துறை தீர்ப்பாயத்தின் நீதிபதி முருகன் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே, கொடநாடு வழக்கை முன்பு விசாரித்த நீதிபதி வடமலை பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மாவட்ட நீதிபதி பணியிடை மாற்றம் செய்யப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் தனிப்படையில் இடம் பெற்றிருந்த துணை கண்காணிப்பாளர் டி.சுரேஷ் தேனி மாவட்டத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் துணை கண்காணிப்பாளராக டி.சுரேஷ் இருந்து வந்தார். இவர் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், இவரை குன்னூரிலிருந்து தேனிக்கு இடம் மாற்றம் செய்து காவல்துறை இயக்குநர் சி.சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், கொடநாடு வழக்கை விசாரணை அதிகாரி பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளராக இருந்த சி.சந்திரசேகர் குன்னூர் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொடநாடு கொலை, கொள்ளை விசாரணைக்குழுவில் இடம் பெற்றுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பரபரப்பாக உள்ள நிலையில், அதை விசாரக்கும் தனிப்படையில் இடம் பெற்றிருந்த அதிகாரி திடீரென பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் டி.சுரேஷ் அதிமுக பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.