தமிழ்நாடு சட்டப்பேரவையில், தஞ்சை, களிமேடு தேர் விபத்து குறித்த விவாதத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை ஜெயலலிதா ஆட்சியில் நடந்த மகாமகம் விபத்தைக் குறிப்பிட்டு விமர்ச்சிக்க, அதிமுகவினர் செல்வப்பெருந்தகை மீதான குற்ற வழக்குகளை குறிப்பிட்டு பதிலடி கொடுத்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு தேர் திருவிழாவில் தேர் மின்கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். தஞ்சை, களிமேடு தேர் மின் விபத்து குறித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தஞ்சை களிமேடு தேர்த் திருவிழாவின்போது, முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றவில்லை என்று கூறி அதிமுக எம்.எல்.ஏ.கள் சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தஞ்சாவூர் களிமேடு தேர்த் திருவிழாவின்போது, தேர் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் 11 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை உயர்த்தி ரூ.25 லட்சமாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளேன். தஞ்சை, களிமேடுவில் தேர் இழுக்கும்போது உயர் அழுத்த மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். சாலைகள் சீரமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே போல, மதுரை சித்திரைத் திருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபத்தின்போது, அரசு முறையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 10 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.
திமுக அரசு, திருவிழா காலங்களில் முழுமையான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் பாதுகாப்பு அளிக்க தவறியதால் தஞ்சை களிமேடு தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சை களிமேடு தேர் திருவிழா மின் விபத்துக்கு திமுக அரசு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம். அதனால், திமுக அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தின்போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர், செல்வப்பெருந்தகை, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை பேசினார். கடந்த 1992ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கும்பகோணம் மகாமகம் திருவிழாவில் நடந்த விபத்தில் 60 பேர் பலியானதைக் குறிப்பிட்டு பேசினார்.
வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சட்டப்பேரவைக்கு வந்தனர். அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, ஜெயலலிதா பெயரைக் குறிப்பிட்டு, பேசியதை சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேரவையில் பேசுவதற்கு அனுமதி கோரினார். ஆனால், சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இரண்டாவது முறையும் அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்கவிலை. இதையடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அனைவரும் சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பேரவை சபை முன்னவரான துரைமுருகன் எழுந்து, அவர்களை சபையில் இருந்து வெளியேற்றும்படி கூறினார். அப்போது சபாநாயகர் அப்பாவு, ‘எதிர்க்கட்சியினர் இருக்கைக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் சபைக் காவலர்களால் வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும், அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சபாநயாகர் அப்பாவு அதிமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சபைக் காவலர்கள் விரைந்து வந்து, அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.,க்களை கூண்டோடு வெளியேற்றினர்.
அதிமுகவினர் வெளியேற்றப்பட்டதற்கு பிறகு, நடந்த விவாதத்தில் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், மகாமகம் பிரச்னை தொடர்பாக, செல்வப்பெருந்தகை பேசும்போது, சட்டசபையில் ஜெயலலிதா பேசியதை, அப்படியே படித்தார். அவர் கருத்தில் எதையும் திணிக்கவில்லை. அதை சபைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி, எதிர்க்கட்சி தலைவர் கூறினார். ஜெயலலிதா பேசியதையும் நீக்கும்படி கூறுகிறாரா என்று தெரியவில்லை.” என்று கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியதற்கு அதிமுகவினர், அவர் மீதான் குற்ற வழக்குகளைக் குறிப்பிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், செல்வப்பெருந்தகை முதல்முறை எம்.எல்.ஏ ஆனது அதிமுக கூட்டணியில் இருந்தபோதுதான், அரசியலில் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் இன்று அவரைப் பற்றி பேரவையில் தவறாகப் பேசுகிறார் என்று செல்வப்பெருந்தகையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை தேவையில்லாத கருத்தை பதிவு செய்துள்ளார். அம்மா (ஜெயலலிதா) அவர்களின் பெயரை குறிப்பிட்டு அவர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், செல்வப்பெருந்தகை திமுகவின் தூண்டுதலின் பேரில்தான் இப்படி பேசி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியினர் செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளை பட்டியிலிட்டு சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகின்றனர்.
சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரது பேச்சை திரும்ப பெற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அதிமுகவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“