சென்னை: அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஆவணப்பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் “தட்கல்” முறை அறிமுகப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பொதுமக்களுக்கு பத்திரப்பதிவு தொடர்பான சேவைகளை அளிக்க “ஒருங்கிணைந்த சேவை மையம் அமைத்தல், வணிகவரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவில் தனியார் தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவை பயன்படுத்துதல், பதிவுத்துறையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைத்தல், அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப் பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்தார். அவர் வெளியிட்ட 32 முக்கிய அறிவிப்புகள்:
> பொதுமக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிகவரித்துறையில் ‘எனது விலைப்பட்டியல் – எனது உரிமை’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
> வணிகவரித்துறையில் வரி ஏய்ப்பினை தடுப்பதில் உதவுபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.
> வணிகவரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் தனியார் தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவை பயன்படுத்தப்படும்.
> வணிக வரித்துறையில் வரி ஆய்வுக் குழு அமைக்கப்படும்.
> வணிகவரித்துறையின் அழைப்பு மையம் (Call Centre) மேம்படுத்தப்படும்.
> வணிகவரி கூடுதல் ஆணையர் தலைமையில் தனி தணிக்கைப் பிரவு உருவாக்கப்படும்.
> சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள இரண்டு இணை ஆணையர் நுண்ணறிவு பணியிடங்கள் கூடுதல் ஆணையர் நிலைக்கு தரம் உயர்த்தப்படும்.
> வணிகவரித் துறையில் பயிற்சி நிலைய இயக்குநர் பணியிடம் தரம் உயர்த்தப்பட்டு அவரது தலைமையின் கீழ் எளிய வணிக பிரிவு (Indirect Taxes Wing) உருவாக்கப்படும்.
> வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் (National Informatics Centre) உருவாக்கியுள்ள GST PRIME என்ற மென்பொருள் ரூ.47.20 லட்சம் செலவில் வாங்கி பயன்படுத்தப்படும்.
> வணிக வரித்துறையில் சுற்றும் படையில் (Roving Squad) பணிபுரியும் அலுவலர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
> தீர்ப்பாயம் அல்லது உயர்நீதி மன்றத்தால் பிறப்பிக்கப்படும் முந்தைய சட்டங்கள் தொடர்பான ஆணைகளில் வரி இழப்பு இனங்களைக் கையாள புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும்.
> வணிகவரித் துறையில் இரண்டு அலுவலக கட்டடங்கள் ரூ.7.80 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
> பொதுமக்களுக்கு பத்திரப்பதிவு தொடர்பான சேவைகளை அளிக்க ” ஒருங்கிணைந்த சேவை மையம்” ரூ.1 கோடி செலவில் உருவாக்கப்படும்.
> சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கான தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
> பதிவுத்துறையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் (Unified Call Centre) ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
> திருமண சான்றுகளில் திருத்தம் செய்வதற்காக இணையவழியாக விண்ணப்பிக்கும் வசதி ரூ.6 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
> அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஆவணப்பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் “தட்கல்” முறை அறிமுகப்படுத்தப்படும்.
> அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப் பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும்.
> பதிவு நடைமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரூ.38 லட்சம் செலவில் மாவட்டங்கள் தோறும் சிறப்பு விழப்புணர்வு கருத்தரங்கங்கள் நடத்தப்படும்.
> அரசு நிலங்கள் பதிவு செய்யப்படுவதை ஆரம்ப நிலையிலேயே “STAR” மென்பொருள் வழியாக தன்னிச்சையாக தடுக்கும் திட்டம் ரூ.12 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
> பதிவுத்துறையிலுள்ள மிகப் பழமையான 50 கட்டடங்களை அப்புறப்படுத்தி ரூ.96.64 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
> பதிவுத்துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும்.
> பதிவுத்துறையில் கட்டட களப்பணி மேற்கொள்வதற்காக பொறியியல் பட்டதாரிகளுக்கு “களப்பணி மேற்பார்வையாளர் உரிமம்” வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
> சங்கங்களின் ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களின் தாமத கோர்வைக்காக விதிக்கப்படும் அபராதத் தொகையை வசூலிக்க சமாதான திட்டம் செயல்படுத்தப்படும்.
> முத்திரைத்தாள் விநியோக சீர்திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக இந்திய முத்திரைச் சட்டம், 1989-ல் உரிய சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
> சென்னை பதிவு மண்டலம் பிரிக்கப்பட்டு இரண்டு மண்டலங்கள் உருவாக்கப்படும்.
> மதுரை பதிவு மண்டலம் பிரிக்கப்பட்டு இரண்டு மண்டலங்கள் உருவாக்கப்படும்.
> சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு கூடுதலாக ஒரு பதிவு மாவட்டம் உருவாக்கப்படும்.
> கோயம்புத்தூர் பதிவு மாவட்டத்தைப் பிரித்து இரு பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும்.
> பதிவுத்துறையில் ஐந்து மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) பணியிடங்கள் உருவாக்கப்படும்.
> சீட்டு மற்றும் சங்கங்கள் செயல்பாடுகளை திறம்பட கண்காணிப்பதற்காக 26 மாவட்ட தலைநகரிலுள்ள நிர்வாக மாவட்டப் பதிவாளர் பணியிடங்கள் உதவி பதிவுத்துறை தலைவர் நிலைக்கு தரம் உயர்த்தப்படும்.
> சிறப்பாக செயல்படும் பதிவுத்துறை அலுவலர்களை ஊக்குவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.