புதுடெல்லி, நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து தனியார்மயமாக்கி வருகிறது. சமீபத்தில் கூட, ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இந்நிலையில், நாட்டின் மிகவும் லாபகரமான காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி.யின் 5 சதவீத பங்குகளை விற்று பணமாக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் இடம் பெற்றது. இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக உலகளவில் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவுகள் காரணமாக, எல்ஐசி.யின் 5 சதவீத பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு சமீபத்தில் மாற்றியது. முதல் கட்டமாக 3.5 சதவீத பங்குகள் மட்டுமே விற்கப்படும் என அறிவித்தது. இந்த பங்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் விற்பனைக்கு விடப்பட்டு, மே 9ம் தேதியுடன் விற்று முடிக்கப்பட உள்ளது. மொத்தம் 22.13 கோடி பங்குகள் விற்கப்பட உள்ளன. அதன் மூலம், ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்டப்பட உள்ளது. இந்த பங்குகளின் விலையை எல்ஐசி நிர்வாகம் நேற்று நிர்ணயம் செய்தது. இதன்படி, ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் 949 வரை விற்கப்பட உள்ளது.