கோவை: “கறுப்பு மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்கள், காவியையும் சற்று காதுகொடுக்க கேட்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என தமிழக அரசைக் குறிப்பிட்டு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் சுபகிருது ஆண்டு பிறப்பு, அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா என முப்பெரும் விழா இன்று (ஏப்.28) நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களிடையே பேசியது: ”எல்லா மடங்களுக்கும் செல்லும் வழக்கம் எனக்கு இருக்கிறது. அவற்றின் சட்ட திட்டங்களை மதிக்கும் பழக்கமும் இருக்கிறது. இறைவனையும், அவர்கள் செய்யும் சேவையையும் பார்க்கிறேனே தவிர, வேறு எதையும் நான் பார்ப்பதில்லை. மரியாதை கொடுக்கிறார்களா? இல்லையா? என்று சிலர் திரித்து எழுதுகின்றனர்.
மேல்மருவத்தூரில் கருவறை வரை செல்வேன். வேறு ஓர் இடத்தில் கருவறை வரை செல்ல முடியாது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு விதி உண்டு. பக்தையாக அங்கு செல்கிறேனே தவிர, ஆளுநராக செல்வதில்லை.
தமிழக அரசு அனைத்து ஆதீன பெரியவர்களையும் அழைத்துப் பேசி கருத்து கேட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு மாற்றம் என நினைக்கிறேன். கறுப்பு நிறத்தை மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்கள், காவியையும் சற்று காதுகொடுத்து கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையாக கருத்துப் பரிமாற்றங்கள் தமிழகத்துக்கு தேவை என நினைக்கிறேன்.
காவி தமிழகத்தில் பெரியது. வலியது. ஆன்மிக பெரியவர்கள் அணிந்திருக்கும் காவியை சொல்கிறேன். அதற்கென ஒரு மரியாதை இருக்கிறது. மதிப்பு இருக்கிறது. பெண்களுக்கு கல்வி, பணி கொடுக்க வேண்டும் என்பதை இங்கு லட்சியமாக கொண்டு இந்த அதீனங்கள் செயல்படுகின்றன. இத்தகைய மடங்களுக்கு தானமாக மக்கள் உதவிகளை செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவும் ஆதீனங்களிடம் தனி கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.
கருத்துரிமை அனைவருக்கும் உண்டு
பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “ஆளுநர்களும் மரியாதைக்கு உரியவர்கள்தான். கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதற்காக ஆளுநர்களை அவமரியாதையாகவும், தரக்குறைவாகவும், பேசுவதையும், நடத்துவதையும் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆளுநர்களுக்கு என்று தனிப்பட்ட கருத்து என்று இருக்க முடியாது. சில நேரங்களில் நீதிமன்றங்களில் சில வழக்குகளுக்கு சொல்லப்படும் கருத்துக்களை எல்லா ஆளுநர்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. டீ சாப்பிட, ஒன்றாக அமர்ந்து சாப்பிட அழைத்தால் வர மாட்டேன் என்று கூறாமல், உட்கார்ந்து பேசினால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அமர்ந்து பேசி தீர்க்க பழகுவோம்.
துணைவேந்தர்களை நியனமத்தில் அனைவர் பங்கும் இருக்க வேண்டும். அரசியல் சார்பு இருக்கக்கூடாது என்பதற்காகதான் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கின்றனர். அதேநேரம், துணைவேந்தரை தேர்வு செய்வோம் என்று கருத்து சொல்வதற்கு தமிழக அரசுக்கும் உரிமையுண்டு. ஆளுநரும் தனது கருத்தை சொல்ல உரிமை உண்டு. கருத்துரிமை எல்லோருக்கும் உள்ளது. ஆளுநர்களுக்கும், முதல்வருக்கும் சுமூகமான உறவாக இருக்க வேண்டும்.
ஆளுநர்களும், முதல்வரும் இணைந்து பணியாற்றும்போது மக்கள் பலன் பெறுவார்கள். எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றும்போது, அது வருங்கால சந்ததிக்கு பலனளிக்காது. மசோதாக்களின் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு நேர, காலம் எதுவும் கிடையாது” என்றார்.
இந்த நிகழ்வில், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.