பொருளாதார மந்தம், பணமதிப்பிழப்பு, கொரோனா இப்படி அடுத்தடுத்த காரணிகள் ஆட்டோமொபைல் துறையை பதம் பார்த்த நிலையில், தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் சிப் பற்றாக்குறையானது இன்னும் மோசமாக்கியுள்ளது.
முந்தைய காலகட்டங்களில் தேவையிலும் சரிவு இருந்த நிலையில் அது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் மேற்கண்ட காரணிகளில் இருந்து மீண்டு வந்த ஆட்டோமொபைல் துறையானது, தேவையிருந்தும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது.
உற்பத்தி பாதிக்கும்
சீனாவில் பரவி வரும் கொரோனா, உக்ரைன் ரஷ்யா பிரச்சனையால் சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை என பல காரணிகளுக்கும் மத்தியில் கடும் சிப் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இது ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தியில் கடும் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தெளிவுபடுத்தும் விதமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் முதல் காலாண்டு உற்பத்தியில் 15 – 20% பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
எந்த வகையான வாகனங்கள்?
இது குறித்து பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா கூறுகையில், சப்ளை பிரச்சனை காரணமாக, உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் வாகனங்கள் உற்பத்தி 15% குறைந்துள்ளது. குறிப்பாக ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் மின்சார வாகனங்கள் உற்பத்தி குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பிரச்சனைகள்
முதல் காலாண்டில் தொடர்ந்து நாங்கள் சப்ளையில் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றோம். சர்வதேச விற்பனையாளர்களுடன் நாங்கள் இணைந்து நெருக்கமாக பணியாற்றிய வருகிறோம், அது எங்களுக்கு மிக பயனுள்ளதாகவும் உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அதிலும் சில தடைகள் உள்ளன. ஆக இது சப்ளையில் இன்னும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
மாற்று வழி
நாங்கள் தொடர்ந்து மாற்று வழியினை ஆராய்ந்து வருகின்றோம். அதற்காக நடவடிக்கையினையும் வேகமாக எடுத்து வருகின்றோம். ஆனாலும் முதல் காலாண்டில் 15 – 20% உற்பத்தி பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஷர்மா தெர்வித்துள்ளார்.
பஜாஜிடம் தற்போது 15000 யூனிட் சேடாக்கின் ஆர்டர் உள்ளது. ஆனால் சப்ளை பற்றாக்குறையால் அதனை சரியான நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமல் தவித்து வருகின்றோம். தாமதத்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
லாபம் எவ்வளவு?
இதற்கிடையில் மார்ச் காலாண்டில் லாபம் (எபிடா) 10% குறைந்து, 1396 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பினாலும், உள்நாட்டில் விற்பனை சரிந்துள்ள நிலையில் மார்ஜின் விகிதமும் சரிவினைக் கண்டுள்ளது. எனினும் நிகரலாபம் 10 சதவீதம் அதிகரித்து 1469 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பணவீக்கத்தின் தாக்கம்
எப்படியிருப்பினும் இந்த நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன வணிகமானது மீண்டு வந்துள்ளது. இது மாதத்திற்கு மாதம் ஒப்பிடும்போது மீண்டு வந்து கொண்டுள்ளது. தற்போது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. எனினும் பணவீக்கத்தின் மத்தியில் சற்றே தேவையிலும் தொய்வு ஏற்பட ஆம்பித்துள்ளது. எனினும் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்தால் அது தேவையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என ஷர்மா கவலை தெரிவித்துள்ளார்.
இன்றைய பங்கு விலை நிலவரம்
இதற்கிடையில் பஜாஜ் ஆட்டோ பங்கின் விலையானது இன்று என்.எஸ்.இ-யில் 1.47% குறைந்து, 3849.90 ரூபாயாக உள்ளது. இதன் இன்றைய உச்ச விலை இதுவரையில் 4000 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 3812 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 4347 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 3027.05 ரூபாயாகும்.
இதே பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 1.38% குறைந்து, 3852 ரூபாயாக உள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 3992.05 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 3814.20 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 4347.95 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 3028.35 ரூபாயாகும்.
Chip shortage may hurt up to 20% production in first quarter: bajaj auto
Chip shortage may hurt up to 20% production in first quarter: bajaj auto/தேவையிருந்தும் சப்ளை செய்ய முடியவில்லை.. 20% உற்பத்தி பாதிக்கலாம்.. பஜாஜ் ஆட்டோ வேதனை!