நிலக்கரி தட்டுபாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் 4-யூனிட்கள் நிறுத்தம். 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகவும் பழமையான இந்த எந்திரங்கள் அவ்வப்போது பழுது ஏற்பட்டு வந்தது. சமீபகாலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கப்பல் மூலம் நிலக்கரி வந்ததைத் தொடர்ந்து முழுவீச்சில் மின்சார உற்பத்தி நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுபாடு காரணமாக யூனிட்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் கடுமையான மின்சார பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 21-ம் தேதி இரவு கப்பல் மூலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 60-ஆயிரம் டன் நிலக்கரி வந்ததை தொடர்ந்து 5 யூனிட்களும் இயங்கி வந்த நிலையில், தற்போது தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் நிலக்கரி கையிருப்பு இருந்தும் இன்று காலை முதல் 4-யூனிட்கள் நிறுத்தப்பட்டு 1-யூனிட்டில் மட்டும் 210-மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இன்று 4 யூனிட்கள் இயங்காததால் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் தலைமை பொறியாளர் கிருஷ்ணகுமாரிடம் பேசினோம், ‘கடந்த சில நாட்களாக யூனிட்டுகள் தொடர்ச்சியாக இயங்கியதால், ஒரு யூனிட்டை தவிர மற்ற 4 யூனிட்களில் மின்சார உற்பத்தி நடந்து வருகிறது’ என்றவரிடம் நிலக்கரி இருப்பு குறித்துக் கேட்டோம், ‘இருப்பு நிலை அளவைக் கேட்டு சொல்கிறேன்’ என்றவர், மீண்டும் பலமுறை அழைத்தும் நமது அழைப்பினை ஏற்கவில்லை.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM