இந்தியா நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியையே பெரிதும் நம்பியுள்ளது. ஆனால், தற்போதைய வெப்ப அலை காரணமாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் அதன் உற்பத்தி திறன் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் மாநிலங்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
ஜார்க்கண்ட்
பீக் ஹவர்ஸின் போது மாநிலத்தில் 1,800-2,100 மெகாவாட் மின் தேவை உள்ளது. ஜார்க்கண்டிற்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு சுமார் 1,850 மெகாவாட் மின்சார சப்ளை வழங்கப்பட்டது. மாநில அரசாங்கம் 200-250 மெகாவாட் பற்றாக்குறையை சமாளித்து வந்தது. ஆனால் தற்போது மின்சாரத்தின் தேவை 2,500-2,600 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் வழக்கமாக வழங்கும் 550 மெகாவாட்டுடன் கூடுதலாக 200 மெகாவாட் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் வேண்டுகொள் விடுத்துள்ளார். மின் பரிமாற்றத்திற்கான ஏலத்தையும் மாநிலம் முன்னெடுத்தது. ஆனால் கிடைக்கவில்லை. நிலைமையை சமாளிக்க தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஜம்மு & காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் 16 மணி நேரத்திற்கும் மேலான மின் தடையை எதிர்கொள்கின்றன. அங்கு 3 ஆயிரம் மெகாவாட் தேவைப்படும் நிலையில், பாதியளவிலான மின்சாரமே வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் சொந்த மின் திட்டங்களின் திறன் உற்பத்தி குறைந்தது, மாநிலத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. யூடியின் மின் திட்டங்கள் 1,211 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலையில் நிர்வகிக்கப்பட்டன. ஆனால், அவை தற்போது 450 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
காஷ்மீரில் NHPC-க்கு சொந்தமான திட்டங்கள் 2000 மெகாவாட் நிறுவப்பட்ட திறனைக் கொண்டிருந்தாலும், அவை 1,400 மெகாவாட்டிற்கும் குறைவாகவே உற்பத்தி செய்கின்றன. அதிலிருந்து மாநிலத்திற்கு 150 மெகாவாட் மட்டுமே வழங்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் சுமார் 2,300 மெகாவாட்கள் பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அதிக கட்டணம் மற்றும் மின்சாரம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் குறைவாக இருப்பதால், 800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வாங்குகிறோம் என்றார்.
த
ராஜஸ்தான்
ஏப்ரல் 2021 இல் தினசரி மின் தேவை சுமார் 2,131 லட்சம் யூனிட்களாக இருந்தது. ஆனால், தற்போது அதன் தேவை 2,800 லட்சம் யூனிட்களாக அதிகரித்துள்ளது. . அதேபோல், அதிகப்பட்ச தேவை 11,570 மெகாவாட்டாக இருந்தது, தற்போது 13,700 மெகாவாட்டாக உள்ளது.
எரிசக்தி துறையின் முதன்மை செயலாளர் ஏ சாவந்த் கூறுகையில், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலக்கரி நெருக்கடி காரணமாக, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் முழு திறனில் செயல்படவில்லை. . மாநிலத்தின் மின் ஆலைகளால் 10,110 மெகாவாட் வரை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், தற்போது 6,600 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கின்றன.
ஹரியானா
ஹரியானாவில் 3,000 மெகாவாட் பற்றாக்குறை எதிர்கொள்கிறது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், மின்சார தேவையை குறைக்க அரசாங்கம் பல வழிகளில் முயற்சித்து வருகிறது. அதானி பவர் லிமிடெட் உடன் முந்த்ரா மின் நிலையத்திலிருந்து விநியோகத்தை மீட்டெடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவை நிகழ்ந்தால், எதிர்காலத்தில் 1,000 மெகாவாட் மின் விநியோகத்தை மறுசீரமைக்க முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
மின்சாரத் துறை அமைச்சர் ரஞ்சித் சிங் கூறுகையில், வெப்ப அலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கோள் காட்டி தேவை அதிகரிப்பை விளக்கியுள்ளார். அதானி பவர் நிறுவனத்திடம் இருந்து 1400 மெகாவாட் மின்சாரம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கும் என நம்புகிறேன். சனிக்கிழமைக்குள் மின்சார பிரச்சினை சீராகும் என நம்புவதாக தெரிவித்தார்.
பஞ்சாப்
நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளே தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மாநிலத்தின் தேவை 7,800 மெகாவாட்டை எட்டிய போது, மாநிலத்தின் மின்சார இருப்பு 7 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. இதன் காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் 2 முதல் 5 மணி நேரம் பவர் கட் செய்யப்படுகிறது. தொழில்துறை பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படவில்லை. கோதுமை அறுவடையின் காரணமாக விவசாய மின் பயன்பாடு குறைவாக உள்ளது.
பஞ்சாபில் அனல் மின் நிலையங்களில் 5,480 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், தற்போது ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3,700 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
சுமார் 1,000 மெகாவாட் எஃப் திறன் பராமரிப்பில் இருப்பதாகவும், மீதமுள்ள மின்தேவை இடைவெளி தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிசா
ஒடிசா மாநிலம் 400 மெகாவாட் மின்சார பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. மாநிலத்திற்கு சரிசாரியாக 4,150 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. அதிலும், பீக் ஹவர்ஸின் அதிகபட்ச தேவை 4,450 மெகாவாட்டாக உள்ளது.
இந்த பற்றாக்குறை தற்காலிகமானது என்றும், இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை சீராகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுந்தர்கர் மாவட்டத்தில் என்டிபிசியின் 441 மெகாவாட் அலகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால், மின்சார தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒடிசா பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் யூனிட் ஆண்டுதோறும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் நிலை என்ன?
சில நாள்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இரவு நேரத்தில் சுமார் 3 மணி மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மக்கள் கேள்வி எழுப்புகையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு மத்திய அரசே காரணம் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார். மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க
நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
மேலும், சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழ்நாட்டில் 2 நாட்கள் மட்டுமே மின் வெட்டு இருந்தது. அந்த மின்வெட்டும் சரி செய்யப்பட்டுவிட்டது. திமுக ஆட்சி அமைந்தவுடன் மின் வெட்டு என்று மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி வருகின்றனர் இப்போது சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.