புதுடெல்லி: மூன்று மாத இடைவெளியில் உச்சநீதிமன்றம் மூன்று தலைமை நீதிபதிகளை சந்திக்கவிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி பதவியில் இருந்து ஓய்வுபெற உள்ளார். அவரையடுத்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள யு.யு.லலித் நவம்பர் 8-ம் தேதி ஓய்வுபெற உள்ளார். அவருக்கு அடுத்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பொறுப்பில் இருப்பார்.
மூன்று மாத இடைவெளியில் மூன்று தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்றம் சந்திக்கவிருப்பது வித்தியாசமான நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட் ஏற்கெனவே தலைமை நீதிபதியாக பணிபுரிந்த ஒய்.வி.சந்திரசூட்டின் மகன் ஆவார்.
குறுகிய காலத்தில் மேலும் பல நீதிபதிகளும் ஓய்வுபெற உள்ளனர். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உள்ள வினீத் சரண்(மே 10), எல்.நாகேஸ்வர ராவ்(ஜூன் 7), ஏ.எம்.கான்வில் கர்(ஜூலை 19), இந்திரா பானர்ஜி (செப்டம்பர் 23), ஹேமந்த் குப்தா (அக்டோபர் 16) அடுத்த சில மாதங்களில் ஓய்வுபெற உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் 70 ஆயிரம் வழக்குகள் உட்பட இந்தியா முழுவதும் 3 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிபதிகள் தொடர்ந்து ஓய்வுபெறுவது அவர்களது ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் என்ற விவாதத்தை துவக்கி வைத்துள்ளது. தற்போது இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆக உள்ளது. பிரிட்டனில் 75, கனடா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நார்வே உள்ளிட்ட நாடுகளில் 70 வயதாக உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, நியூசிலாந்து, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வாழ்நாள் முழுக்க நீதிபதிகளாக பணியாற்றலாம் என்று இருக்கும் நிலையில் நீதிபதிகளின் ஓய்வு வயதும் விவாதத்திற்குரிய பொருளாக மாறியுள்ளது.