ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்ததற்காக 2009ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூா் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, தா்மலிங்கத்துக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், வெறும் 69 அறிதிறன் புள்ளிகளுடன் (ஐக்யூ) அறிவுத் திறன் குறைபாடு கொண்ட தா்மலிங்கத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது சா்வதேச அளவில் சா்ச்சையை எழுப்பியது.
எனினும், குற்றச் செயலில் ஈடுபடும்போது, தனது தவறின் தன்மையை முழுமையாக உணா்ந்தே தா்மலிங்கம் செயல்பட்டதாக மனநல நிபுணா்கள் சான்றளித்துள்ளதால் மரண தண்டனையை ரத்து செய்யத் தேவையில்லை என்று சிங்கப்பூா் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய பல்வேறு சட்ட போராட்டங்கள் நடந்த நிலையில் மரண தண்டனையைக் குறைப்பதற்கான அவரது கடைசி முறையீட்டு மனுவையும் சிங்கப்பூா் நீதிமன்றம் கடந்த மாதம் 29-ஆம் திகதி தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் புதன்கிழமை அன்று மனித உரிமை ஆா்வலா்களின் எதிா்ப்பையும் மீறி தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
அவரது இறுதிச் சடங்கு மலேசியாவில் குடும்பத்தினா் வசிக்கும் இபோ நகரில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.