இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தின் தரை தளத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை சேமித்து வைக்கும் குடோனில் நேற்று (27.04.2022) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியின் அருகே உள்ள நரம்பியல் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் இரண்டாம் தளத்திலிருந்த நெஞ்சக பிரிவு நோயாளிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது ஆறுதலாக உள்ளது. தீயணைப்புத்துறை வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தடுக்கப்பட்டுள்ளது.
சிக்கலான நோய்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை துரிதமாக செயல்பட்டு மீட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். மேலும் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டது மிகுந்த பாராட்டுக்குரியது. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 16 பேர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் தற்போது தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம், இதர பழமைவாய்ந்த கட்டிடங்கள், தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளின் பழமையான கட்டிடங்கள் மற்றும் மக்களின் பயன்பாட்டிற்கு உள்ள அனைத்து பழமையான கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி, இடிக்க வேண்டிய நிலைமையில் இருந்தால், அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தையும், பராமரிப்பு பணிகள் செய்து மீண்டும் பயன்படுத்தக் கூடிய கட்டிடங்களாக இருந்தால் உடனடியாக பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு இனிமேல் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது”
இவ்வாறு அந்த அறிக்கையில் கே கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.